ஓபிசி இட ஒதுக்கீடு.. தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. ம.நீ.ம கமல்ஹாசன் வேண்டுகோள்!

சென்னை: OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும், இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு இன்று வெளியானது. சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

அதேபோல் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற குழு அமைக்க வேண்டும். இதற்காக உடனே மூன்று நபர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும், இதற்கு சட்ட ரீதியாக எந்த விதமான தடையும் இல்லை என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் இந்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட்டில், தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.

சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும், என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

Related posts

Leave a Comment