மக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (EIA Draft 2020) மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (EIA Draft 2020) மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! இந்த வரைவுக்கு எதிராக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் !

புதிய வரைவு படி, புதிதாக தொழில் தொடங்கவரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) பெறாமலேயே தொழில் தொடங்கிவிட்டு பிறகு அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை எப்படி ஏற்க முடியும்?

50,000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு EIA clearance பெற வேண்டும் என்றிருப்பதை 1,50,000 சதுர அடி வரை இனி மேல் அனுமதியே இன்றி கட்டுமானங்களைச் செய்து கொள்ளலாம் என்று மாற்றுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடாதா ராணுவத் திட்டங்களுக்கு மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த Strategic என்ற பதத்தைப் பயன்படுத்தி, இனி எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவித்துக் கொள்ளலாம் என்று இந்த வரைவில் கூறப்பட்டிருக்கிறது. இது,ஜனநாயக நாட்டில் மிகத்தவறான முறையாகிவிடாதா?

எனவே, மக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (EIA Draft 2020) மத்திய அரசு மொத்தமாகத் திரும்பப்பெற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த வரைவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று பழனிசாமி அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

Related posts

Leave a Comment