சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகள் பல மூடப்பட்டுள்ளன. சாதாரணமான தலைவலி, நிரிழிவு, கல்லடைப்பு உள்ளிட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கின்றனர்.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதை தடுக்க சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அணிதல், பொது இடத்தில் எச்சில் துப்புதல் கூடாது என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும் பொது மக்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் , செவிலியர்களுக்கு தொற்று பரவியதை தொடர்ந்து சுகாதாரத்துறையினரால் கிருமிநாசினி தெளித்து மூடி வருகின்றனர். இதுபோல் நோய் தொற்றுக்கு பயந்து தனியார் மருத்துவமனைகள் சில தாங்களாவே மூடி வருகின்றன.இம்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிரிழிவு, சர்க்கரை ,கல்லடைப்பு, உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டவர் கள் சிகிச்சை பெறமுடியாத நிலை உருவாகி உள்ளது. கட்டுப்பாடுகளுடன் தனியார் மருத்துவமனைகளை செயல்பட அனுமதிக்க வேண்டும்.இதன் மூலம் சிறிய பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவமனை சென்று நிர்வாரணம் பெற வழி பிறக்கும்.இதன் மீது மாவட்ட நிர்வாகமும் தனி அக்கறை கொள்ள வேண்டும்.
வெப்பநிலை அதிகரித்தாலே டெஸ்ட்
ரத்தகொதிப்பு, நிரிழிவு, சர்க்கரை நோயால் பாதித்தவர்கள் வழக்கம்போல் தனியார் மருத்துவமனைக்கு சென்றாலும் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அரசு மருத்துவ மனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் கூறுகின்றனர். நார்மல் செக்கப் செய்துகொள்ளும் கர்ப்பிணிகளும் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்கின்றனர். அரசு மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழியும் நிலையில் இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பயத்தை நீக்கி அனைத்து நோயாளிக்கும் தனியார் மருத்துவமனைகள் திறந்து சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், புகைப்படக்கலைஞர்,சாத்துார்.