வீட்டையே பள்ளியாக்கிய ஆசிரியை

சிவகாசி:ஆசிரியர் இல்லாத கல்வி ஆன்மா இல்லாத உயிர். தன்னை விட உயர்ந்து விட்டானே என பொறாமைப்படாத ஒரே ஆன்மா ஆசிரியர் மட்டுமே.

ஒவ்வொரு மாணவனுக்கும் கனவுகள் உண்டு. அந்த கனவுகளை லட்சியமாக்கும் வல்லமை கொண்டவர்கள் ஆசிரியர்களே. தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் இயங்க வில்லை. தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் இதுவரை துவங்கவில்லை.

இருந்தாலும் சிவகாசி கே.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் ஜெயமேரி.மாணவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து சமூக இடைவெளியுடன் ஆடல் ,பாடலுடன் பாடம் கற்று தருகிறார். பொதுவாக பாடம் என்றாலே மாணவர்களுக்கு வேப்பங்காய்தான். ஆனால் இவர் வகுப்பு நடத்தினாலே மாணவர்களுக்கு உற்சாகம்தான். மாணவர்கள் போக்கில் பாடம் கற்பிப்பதால் இவரிடம் பாடம் கற்க ஆர்வத்துடன் வருகின்றனர். இதோடு இவர் தனது வீட்டிலே சிறிய நுாலகத்தை உருவாக்கி மாணவர்களுக்கு உதவுகிறார்.ஆசிரியை ஜெயமேரி:

கொரோனா தொற்றால் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தெரியாத நிலையில் உள்ளோம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை துவங்க கிராம மாணவர்களுக்கு என்ன செய்வது என யோசித்த போது அருகாமைப் பள்ளிகள் என்ற திட்டத்தை ஆரம்பித்தேன். இதற்கு வானம் பதிப்பக முகநுால் நண்பர் அனுப்பிய புத்தகங்கள் கை கொடுத்தது.

வீட்டின் அருகில் உள்ள 10 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து சமூக இடைவெளியுடன் புத்தக வாசிப்பு, கதை, ஆடல் பாடல்,ஓவியங்களுடன் பாடம் கற்றுத் தர ஆரம்பித்தேன். இதோடு குட்டீஸ் நூலகம் தொடங்கி புத்தகங்களை படிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறேன்,என்றார்.

Related posts

Leave a Comment