பாழடிப்பு தண்ணீர் குழாய்கள் உடைப்பால் தெப்பம் குடிநீரில் குளியல் போடும் கிராம மக்கள்

விருதுநகர்:மாவட்டத்தில் தாமிர பரணி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைப்பால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. ஆங்காங்கு தெப்பம் போல் தேங்கி நிற்பதால் இதில் குளியல் போடுகின்றனர் கிராம மக்கள்.

ஆண்டுகள் கடந்தும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது மாவட்ட நிர்வாகம்.தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து நகர், கிராமங்களுக்கும் குடிநீர் சப்ளையாகிறது. இதன் வழியில் ஏற்படும் குழாய் உடைப்பை உடனுக்குடன் சரி செய்யாததால் வழி நெடுகிலும் பல இடங்களில் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி ரோட்டில் ஓடி அருகில் உள்ள பள்ளங்களில் தேங்குகிறது.

விருதுநகர் பேராலி ரோட்டில் சப்ளைக்காக 2 லட்சம் லிட்டர் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்ட பட்டு உள்ளது.இதன் அருகில் உடைப்பு ஏற்பட குடிநீரானது காலி இடத்தில் தேங்கி தெப்பம் போல் காட்சியளிக்கிறது. இது தற்போது சுற்று கிராம மக்களின் நீச்சல் குளமாக மாறி உள்ளது.

இங்கு குளிப்பதோடு சோப்பு போட்டு துணி துவைக்கவும் செய்கின்றனர். சோப்பு கழிவு நீரும் குடிநீருடன் கலந்து சப்ளையாகும் அவலமும் தொடர்கிறது. ஆண்டுகள் கடந்து இதை சீரமைக்காமல் தாமிரபரணி குடிநீரும் வீணாக மக்களுக்கு 20 நாள் ஒரு முறையே தண்ணீர் வழங்கும் நிலை உள்ளது.இது போன்ற உடைப்புகளை உடனுக்குடன் சீர் செய்தாலே பற்றாகுறையின்றி போதுமான நீர் கிடைக்க வழி பிறக்கும்.

வேண்டாம் மேம்போக்கு பணி

குடிநீர் பற்றாக்குறையே இது போன்ற அஜாக்கிரதையால்தான் உருவாகிறது என்பது தெள்ள தெளிவாகிறது. வழி நெடுகிலும் உள்ள குழாய் உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேம்போக்காக பழுது நீக்காது முறையாக மேற்கொள்ள வேண்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

– செல்வராஜ், சமூக ஆர்வலர், சின்னகாமன்பட்டி.

Related posts

Leave a Comment