ஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய ‘நத்தம்’ கோஷ்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அதிமுக 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் இதுவரை அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வலம் வர தொடங்கியுள்ளனர். 1989, 1991 லோக்சபா தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதி எம்.பியாக இருந்தார் சீனிவாசன். பின்னர் அதிமுகவின் பொருளாளர் நிலைக்கும் உயர்ந்தார். பின்னர் மீண்டும் எம்.பியாக்கப்பட்டார் சீனிவாசன்.

ஏறுமுகத்தில் நத்தம் விஸ்வநாதன் அப்போது நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுகவில் பெரிய செல்வாக்கு இல்லைதான். ஆனால் காலங்கள் மாறிப் போக நத்தம் விஸ்வநாதனுக்கு எல்லா சூழ்நிலையும் ஏறுமுகமானது. அவர் ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சரானார். அதிமுகவின் ஐவர் அணியில் ஒருவராக உயர்ந்தார். அப்போது சீனிவாசன் அணி என்பதே இல்லை என்கிற நிலைதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தது.

ஜெ. எழுதிய முடிவுரை 2016 சட்டசபை தேர்தலின்போது நத்தம் விஸ்வநாதன் கட்டி வைத்த கோட்டையை தரைமட்டமாக்கிவிட்டார் ஜெயலலிதா. அவர் வெற்றி பெறவே முடியாது என தெரிந்தும் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார். நத்தம் விஸ்வநாதனும் தோற்று போனார். அந்த தேர்தல் முடிவுடன் நத்தம் விஸ்வநாதனின் சகாப்தத்துக்கு ஜெயலலிதா முடிவுரை எழுதிவிட்டதாகவே கருதப்பட்டது.

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் வென்ற சீனிவாசனுக்கு வனத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனையடுத்து சீனிவாசன் தமது ஆதரவை மீண்டும் பலப்படுத்தினார். இந்த முறை சீனிவாசனுக்கு மகன்கள் பக்க பலமாக இருந்தனர். அதேபோல் மாவட்ட செயலாளர் மருதராஜும் சீனிவாசனுக்கு ஆதரவாக இருந்தார். இதனால் திண்டுக்கல் அதிமுக என்றாலே சீனிவாசன்தான் என்கிற அசைக்கவே முடியாத அஸ்திவாரம் போடப்பட்டது.

அப்போது வேறுவழியே இல்லாமல் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தில் தம்மை நத்தம் விஸ்வநாதன் இணைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். உச்சகட்டமாக நத்தம் விஸ்வநாதனின் பிறந்த நாளுக்கு ஒரே ஒரு போஸ்டர்தான் திண்டுக்கல்லில் ஒட்ட முடியும் என்கிற நிலைமை கூட வந்தது. அதிமுக அணிகள் இணைந்தபோதும் கூட நத்தம் விஸ்வநாதன் அணியால் மீண்டும் தலைதூக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அதிமுகவில் மாவட்டங்கள் பிரிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் நத்தம் விஸ்வநாதனும் இடம்பெற்றிருந்தார். இங்கிருந்துதான் நத்தம் விஸ்வநாதனின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. தற்போது நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகிவிட்டார் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரானார் திண்டுக்கல் சீனிவாசன்.

இதனையடுத்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் அமைதியாக இருந்த நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் வாழ்த்து சுவரொட்டிகளை குவித்து வருகின்றனர். நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் திடீர் 2-ம் கட்ட எழுச்சி, அதிமுகவில் புதிய கோஷ்டி பூசலுக்கு வலுவான அடித்தளத்தைப் போட்டு வைத்திருக்கிறது என்பது எந்தவிதத்திலும் மிகை இல்லை என்பதை வரும் நாட்கள் தெளிவாகவே உணர்த்தப் போகின்றனர்.

Related posts

Leave a Comment