மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா பெயர் சூட்டிய முதல்வர் பழனிச்சாமி

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்ட்ரல் மெட்ரோ நிலையம் புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கோயம்பேடு என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது.

மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவர அதிமுக எடுத்த முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்ட அவர், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ என்பது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்று பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம்‌ என்று பெயரிட்டதைப்‌ போல்‌, ஆலந்தூர்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர்‌ அண்ணா ஆலந்தூர்‌ மெட்ரோ என்றும், சென்னை சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையத்திற்கு ‘புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ மத்திய ரயில்‌ நிலையம்‌’ என்று பெயர்‌ வைத்ததைப்‌ போல சென்ட்ரல்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ என்றும்‌, மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ ஆசியாவில்‌ மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர்‌ பேருந்து நிலையத்தையும்‌, அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும்‌ திறந்து வைத்ததாலும்‌, சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும்‌ வகையில்‌, புறநகர்‌ பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்தை புரட்சித்‌ தலைவி டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா மெட்ரோ என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment