சிலம்பாட்டம்… ராமேஸ்வரத்தில் இலவச பயிற்சி… 70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி!!

ராமேஸ்வரம்: மனசு இருந்தால் மார்க்கம் உண்டு என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதற்கு உதாரணமாக திகழ்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட வித்தகரும், கட்டிட தொழிலாளியுமான கணபதி முருகேசன். கொரோனா கால கட்டத்தில் உதவ வேண்டும், தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. பலரும் வேலை இழந்து, உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். செய்து கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு கிடைத்த வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டு இருந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களும் வேலையிழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அங்கு விவசாயம், கட்டிட வேலை என்று கிடைத்த வேலைக்கு சென்று கொண்டுள்ளனர். பெரும்பாலும் கட்டிட வேலையைத்தான் தேர்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வகையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கணபதி முருகேசன். வயது 70. இவர் தினமும் கட்டிட வேலைக்கு சென்று ஒரு நாளைக்கு ரூ. 800 வருமானம் பெறுகிறார். இதற்கிடையில் காலை மற்றும் மாலை வேளைகளில் 200 குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கிறார். தனக்கு தெரிந்த இந்த சிலம்பாட்டம், தமிழகத்தின் பாரம்பரிய, தற்காப்புக் கலை இந்த மண்ணில் இருந்து மறையக் கூடாது என்பதற்காக இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

இந்த 70 வயதிலும் லாவகமாக கம்பை சுற்றுகிறார். இவரது ஆர்வத்தைப் பார்த்து சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக கம்புகளை சுற்றுகின்றனர். இந்த வயதிலும் சளைக்காமல் வேகமாக கம்பை சுற்றுகிறார். தமிழகத்தின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் இவரைப் போன்றவர்களால்தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

Related posts

Leave a Comment