ஓய்வு அறிவிச்சிடலாமான்னு தொடர்ந்து யோசிச்சேன்… அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டேன்

சௌதாம்டன் : கடந்த இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டியில் அந்த அணியின் முன்னணி பௌலர் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்படவில்லை. இரண்டாவது மற்றும் 3வது போட்டிகளில் சேர்க்கப்பட்ட நிலையில், தனது 500 விக்கெட்டுகள் சாதனையை அவர் எட்டினார். இந்நிலையில் முதல் போட்டியில் தான் சேர்க்கப்படாததால் ஓய்வு அறிவித்து விடலாமா என்று தான் தொடர்ந்து யோசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெற்றது. இந்த தொடரில் 3க்கு 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தின் முன்னணி பௌலர் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்படாத நிலையில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வி கண்டது.

இதனிடையே, முதல் போட்டியில் தான் இல்லை என்று தெரிந்தவுடன் மிகவும் சோர்ந்து போனதாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களும் மைதானத்தில் சென்று விளையாடியபோது தான் ஹோட்டல் அறையில் இருந்தது தனக்கு மிகவும் வேதனையை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து விடலாமா என்ற எண்ணமும் தனக்கு தோன்றியதாகவும் பிராட் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 2வது மற்றும் 3வது போட்டிகளில் சேர்க்கப்பட்ட பிராட் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இதுபோன்ற சூழல்களை சந்தித்திருந்தாலும் ஓய்வு அறிவிக்கும் எண்ணம் தனக்கு ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2வது மற்றும் 3வது போட்டிகளில் சேர்க்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட், தனது சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். மேலும் தன்னுடைய 500 விக்கெட்டுகள் சாதனையையும் அவர் சிறப்பாக முன்னெடுத்தார். இங்கிலாந்து அணியில் முன்னதாக ஜேம்ஸ் ஆன்டர்சன் இந்த சாதனையை செய்துள்ள நிலையில், இரண்டாவது வீரராக இந்த சாதனையை செய்துள்ளார். பிராட். மேலும் 600 விக்கெட்டுகளை நோக்கி தன்னுடைய சாதனை பயணம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment