சிவகாசி நகராட்சியில் வீடு வீடாக தொற்று பரிசோதனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகராட்சிப் பகுதிகளில், ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு வீடாக சென்று, வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு பணிகளை கண்காணித்து வருகிறார். சிவகாசி நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள், அரிமா சங்கம், பசுமை அமைப்பு நிறுவனங்கள் இணைந்து கொரோனா இல்லாத சிவகாசி என்ற மருத்துவ முகாமை, நகராட்சியின் முப்பத்தியிரண்டு வார்டுகளிலும் நடத்தி வருகின்றனர்.

கடந்த பனிரெண்டு நாட்களில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், சுகாதாரத்துறையினர், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் பத்து பேர் கொண்ட குழுக்களாக சென்று கணக்கெடுக்கும் பணிகளும், வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வெப்ப நிலை பரிசோதனையும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி மூலம், ஆக்ஸிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்டது.

ஏழு கோவில் தெரு பகுதியில் 450 வீடுகளில் பரிசோதனைகள் செய்யப்பட்டு, 126 பேருக்கு மருத்துவர்கள் பரிசோதித்து தடுப்பு, எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு தெருவிலும் சுகாதாரப்பணிகள் செய்யப்பட்டு லைசால் மருந்து தெளிக்கப்பட்டது. மருத்துவ முகாமில் சிவகாசி நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் பேச்சிமுத்து உள்பட நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment