மன அழுத்தம் குறைக்கும் காய்கறி, மூலிகை தோட்டம்

சிவகாசி:கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் இந்நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பதை வெயிலில்தான் உணர முடிகிறது. மழை பொழிய மரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் மன நிம்மதிக்கு வீட்டில் செடிகள் வளர்த்தலும் அவசியம்.

தற்போது பெரும்பாலானவர்கள் செடிகளின் அருமை உணர்ந்து மாடி தோட்டம், வீட்டின் காலி மனையில் தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர். பலர் புதிதாக வீடு கட்ட துவங்கும்போதே செடிகளையும் நட்டு வளர்க்கிறார்கள். இதோடு வீட்டிலேயே மூலிகை செடிகளை வளர்க்கவும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வீட்டிலேயே வளர்ப்பதால் சுத்தமான காற்று கிடைக்கிறது.

அந்த வகையில் வீடு, தோட்டங்களில் பூச்செடி, காய்கறி, மூலிகை செடிகள் நட விரும்புவர்களுக்கு சிவகாசி காந்தி ரோட்டிலுள்ள ‘ஸ்டெம் ரிசர்ச் ட்ரேடிங்’ நடத்தி வரும் யாமினி ரத்னா குறைந்த விலையில் வழங்குகிறார்.

பி.எஸ்.சி., தாவரவியல் பட்டதாரி பெண்ணான இவர் குண்டு மல்லி, ரோஜா, கனகாம்பரம், தக்காளி, கத்தரி, பாகற்காய், முள்ளங்கி உள்ளிட்டவைகளும், மூலிகை செடிகளான ஓமவல்லி, துாதுவளை, துளசி, நாயுருவி, குப்பை மேனி உள்ளிட்ட செடிகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்.

இதோடு இயற்கை உரமான மண்புழுவும் விற்பனை செய்கிறார். இங்கு அனைத்து செடிகளும் இயற்கை உரம் கொண்டே வளர்க்கப்படுகிறது.இயற்கை மீது ஆர்வம்10 ம் வகுப்பு படிக்கும் போதே இயற்கை, செடிகளின் மீது அதிக ஆர்வம் உண்டு. இதனால் கல்லுாரியிலும் தாவரவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தேன். செடிகளை வளர்ப்பதால் மன அழுத்தம் குறைகிறது. வீட்டிலே வளர்க்க கூடிய காய்கறி , மூலிகை , பூச்செடிகளை இயற்கை உரமிட்டு உருவாக்கி விற்பனை செய்கிறேன். செடிகளை பராமரிப்பது குறித்த ஆலோசனையும் வழங்குகிறேன்.

யாமினி ரத்னா,சிவகாசி.

உற்சாகம் தொற்றி கொள்ளும்.

சுத்தமான காற்று என்பது மிகவும் அரிதாகி விட்டது. மாசுவிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள மரங்கள் , செடிகள் அவசியம். தினமும் செடிகளோடு நேரம் செலவிடுவது மனதிற்கு இதமாக உள்ளது. அவற்றை பார்க்கையில் தாமாகவே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். வீட்டின் மாடியில் தக்காளி, கத்தரி போன்ற செடிகள் வளர்ப்பதால் சமையலுக்கு தேவையான காய்கறிகள் வெளியில் வாங்க தேவையில்லை.

பிருந்தா ஸ்ரீ, மாடி தோட்டம் ஆர்வலர்,

வீடும் அழகு பெறும்

மாடியில் பூந்தொட்டிகளில் பூச்செடிகள், மூலிகை செடிகள் வளர்ப்பதால் காற்றடிக்கும் போது மூலிகை மணத்தோடு காற்று கிடைக்கிறது. சளி, இருமல் போன்றவற்றிற்கு நாம் வளர்க்கும் செடிகளையே மருத்துவத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக டாக்டரை தேடி செல்ல தேவையில்லை. இந்த செடிகளால் வீடும் அழகாக காட்சியளிக்கும்.

பிரதிமா, தோட்டம் ஆர்வலர்,

Related posts

Leave a Comment