19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து – அயர்லாந்து இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் விக்கெட்களை இழந்தாலும் அதிரடி ஆட்டம் ஆடியது. பின் மீண்டும் விக்கெட்களை இழந்து 350 ரன்கள்குவிக்கும் வாய்ப்பை இழந்தது. விக்கெட் வீழ்த்தினாலும் இங்கிலாந்து அணி ரன் குவித்த வேகத்தால் திக்கித் திணறியது அயர்லாந்து அணி.

மூன்றாவது போட்டி

மூன்றாவது போட்டி இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றி உள்ளது.

டாஸ் வெற்றி இந்த நிலையில், கடைசி போட்டியிலாவது அயர்லாந்து ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற கேள்வியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்கியது. அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

துவக்கம் சொதப்பல் இங்கிலாந்து அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை, துவக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஜேசன் ராய் 1 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மார்கன் – பான்டன் இங்கிலாந்து அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. விக்கெட்கள் பறிபோனாலும் அந்த அணியின் ரன் ரேட் மட்டும் உயர்ந்து கொண்டே சென்றது. கேப்டன் இயான் மார்கன் அதிரடி ஆட்டம் ஆடினார். நான்காவது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து டாம் பான்டன் சிறப்பாக ஆடினார்.

19 பவுண்டரிகள் இயான் மார்கன் அதிரடி ஆட்டம் ஆடி 15 ஃபோர், 4 சிக்ஸ் என 19 பவுண்டரிகள் விளாசி சதம் கடந்தார். 84 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டாம் பான்டன் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின் இங்கிலாந்து அணி மீண்டும் விக்கெட்களை இழக்கத் துவங்கியது.

விக்கெட் சரிவு சாம் பில்லிங்க்ஸ் 19, மொயீன் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 216 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. அத்துடன் அந்த அணியின் ஸ்கோர் உயராது என கருதப்பட்டது. அப்போது பின்வரிசை வீரரான டேவிட் வில்லி அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார்.

டேவிட் வில்லி அரைசதம் வில்லி 42 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து சிறப்பாக ஆடினார் டாம் கர்ரன். அதில் ரஷித் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார். 298 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து. அதன் பின்னும் அந்த அணியின் ஆட்டம் முடிவுக்கு வரவில்லை.

இங்கிலாந்து ரன் குவிப்பு கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாம் கர்ரன் மற்றும் சகிப் மஹ்மூத் தங்கள் பங்கிற்கு ரன் சேர்த்தனர். டாம் கர்ரன் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சகிப் 12 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 328 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கு அயர்லாந்து அணியால் 250 ரன்களைக் கூட சேஸிங் செய்ய முடியாது என்றே விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடினமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது இங்கிலாந்து அணி. அயர்லாந்து அணி பந்துவீச்சின் அனுபவமின்மையே இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணம் ஆகும்.

Related posts

Leave a Comment