விருதுநகர்:கொரோனா கோரத்தாண்டவம் முடிவுக்கு வராததால் அனைத்து தொழில்களும் முடங்கி வருகின்றன. போக்குவரத்து வசதி இல்லாததால் நீண்ட துாரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் எண்ணற்றோர் தவித்து வருகின்றனர்.
தொழில் நிறுவனங்கள் 75 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. எனினும் பஸ்கள் இயக்கப்படாததால் பெரும்பாலான நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. வேலைக்கு சென்றாலும் செல்லா விட்டாலும் செலவுகளை சமாளிக்க வேண்டிய தருணம் குடும்ப பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வேலையிழந்த கணவன், மனைவி இருவரும் இணைந்து தள்ளு வண்டிகளில் பழங்கள், காய்கறிகளை தெருத்தெருவாக விற்று வருகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. சிலர் சிற்றுண்டிகளை தயாரித்து விற்று வருகின்றனர். இப்படி அன்றாடம் ஏற்படும் குடும்ப செலவுகளை எதாவது ஒரு வழியில் சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
பெண்கள் பலர் சுய தொழிலில் ஈடுபட்டு குறிப்பிட்ட வருமானம் ஈட்டி வருகின்றனர்.அந்த வகையில் விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த குடும்ப தலைவி பூங்கோதை காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை சுற்று வட்டார குடியிருப்போரிடம் ஆர்டர் பெற்று டோர்டெலிவரி செய்து வருகிறார்.அவர் கூறியதாவது: விளை பொருட்களை விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்து உழவர்சந்தை விலைக்கே விற்கிறேன். தேவையான காய்கறி, பழம், கீரை வகைகளை 89039 19106 ல்ஆர்டர் செய்தால் இலவசமாக டோர்டெலிவரி செய்து வருகிறேன்,என்றார்.