போர் கோழிகளுக்கு என்றுமே மவுசு

காரியாபட்டி:தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் சேவல் சண்டையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

காணும் பொங்கல் அன்று மக்களை மகிழ்விக்க தென் மாவட்டங்களில் நடத்தப்பட்டது தான் சேவல் சண்டை. போர்க்குணம் கொண்ட சேவல் எதிரியை ஒருபோதும் முதுகில் தாக்காது. நேருக்கு நேர் மோதி எதிரியை வீழ்த்தும். தமிழர்கள் அது போன்றவர்கள்தான் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்றதான் இந்த விளையாட்டு .

அப்படிப்பட்ட வீர விளையாட்டை நடத்த அனுமதி இல்லாமல் சேவல் சண்டை அழிவின் விளிம்புக்கு சென்றாலும் அதை வளர்க்க பலர் இன்றும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு வண்ணங்களில் சேவல்கள் இருந்தாலும் அதிக போர்க்குணம் கொண்ட கீரி சேவலுக்கு என்றுமே கிராக்கி . இதிலும் ஆர்வலர்களுக்கு பிடித்த வண்ணங்களில் இருக்குமேயானால் என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்கி செல்வர்.

இதுபோன்ற சேவல்கள் ரூ. 20 ஆயிரம் முதல் அதற்கு மேற்பட்ட தொகைகளில் விற்பனையாகிறது. இதில் நல்ல லாபம் இருப்பதால் காரியாபட்டியை சேர்ந்த கந்தன் இதை வளர்த்து வருகிறார். அவர் கூறியதாவது. சண்டைக்கோழிகளை தனது பிள்ளைகளாக நினைத்து ஆர்வலர்கள் வளர்க்கின்றனர். கம்பு, சோளம், கேழ்வரகு,கோதுமை, பாதாம், பிஸ்தா, பேரிச்சை, நாட்டு மருந்துகள், நீச்சல், நடைபயிற்சி கொடுத்து வலு ஏத்தி போர்ப்பயிற்சி கொடுப்பர்.

போட்டி நடத்த அனுமதி இல்லாததால் பெரும்பாலானோர் இதை வளர்க்க தயங்குகின்றனர். ஆர்வமுள்ள ஒரு சிலர் என்ன விலை கொடுத்தாவது வாங்கி சென்று வளர்க்கின்றனர். என்னிடம் ஒரு கீரி சேவல் மட்டுமே உள்ளது. அதிக விலைக்கு பலர் கேட்கின்றனர். இதிலிருந்து குஞ்சுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக விற்க மனமில்லாமல் வளர்த்து வருகிறேன்,என்றார்.

Related posts

Leave a Comment