தமிழகத்தில் இந்தி கட்டாயமா? புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்!

புதிய தேசிய கல்விக் கொள்கைக்குக் கடந்த ஆண்டு முதல் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அமர்வு, இந்தக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, வரும் ஜூலை 31ம் தேதி வரையில், பொது மக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது திடீரென ஒப்புதல் அளித்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு கல்வித் திட்டத்தில் கட்டாயமான சில மொழிகளை திணிப்பதில் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டி வருகிறது. குறிப்பாக, இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கல்வியைப் புகுத்த தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய தேசிய கல்விக் கொள்ளை குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கும் வகையில், புதிய தேசியக் கல்வி இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு மக்களிடம் 30 நாள்களுக்குள் கருத்து கேட்கப்படும் என்று மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது. இதனிடையே, ஜூலை 31ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவித்த அரசு திடீரென புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றியுள்ளது.

நடிகர் சூர்யா குடும்பம் எதிர்ப்பு அகரம் அறக்கட்டளையின் மூலம் பல மாணவ, மாணவியர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா, இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக, மும்மொழிக் கல்வித் திட்டத்தின் மூலம் மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது என சூர்யா மற்றும் ஜோதிகா பேசியிருந்தனர்.

ஆரம்பக் கல்வித் திட்டத்திலும் கைவைத்துள்ள இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கையானது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில், 3 வயது முதல் 8 வயது வரையிலான கல்வி முறைக்கு பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி முறை அமலிலிருந்தது. ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையானது, அதற்கு மாறாக அமைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் கல்வித் துறை குறித்து அனைத்திந்தியக் கணக்கெடுப்பு நடைபெற்றதில், உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை 2017-18-ம் ஆண்டில் 25.8 சதவிகிதமாக உள்ளது. இதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், உயர் வகுப்பில் சேர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2035-ம் ஆண்டிற்குள் உயர் கல்வியில் சேர்வோரின் எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NACC எனும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது, என்ஏசிசி-யில் இருந்து தனி அமைப்பாகப் பிரித்து தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் 2030-ம் ஆண்டிற்குள் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது, இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் அல்லது இந்திய மொழிகளில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அதாவது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆங்கிலம் தவிர இந்தி உள்பட மும்மொழி திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தான் தமிழகத்தில் இந்தியைத் திணிக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, கட்டாயம் என்பது, விருப்பம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி தற்போது புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

Leave a Comment