சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி

மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி பூர்ணசுந்தரி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை சரிசெய்வேன் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

மதுரை மணிநகரத்தை சேர்ந்தவர் கே.முருகேசன். தனியார் நிறுவனத்தில் விற்பனையாளர். இவருடைய மனைவி ஆவுடைதேவி. இந்த தம்பதியின் மூத்த மகள் பூர்ணசுந்தரி. இவர் 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வில் கலந்துகொண்டு, அகில இந்தியஅளவில் 286-வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளார்.

இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட பார்வை நரம்பு கோளாறு காரணமாக கண் பார்வையை இழந்தார். இருப்பினும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி என்ற ஒற்றை இலக்கை விரட்டிப்பிடித்து சாதித்துள்ளார்.

இதுபற்றி பூர்ணசுந்தரி கூறியதாவது:-

பார்வை இழந்ததை பெரிய கவலையாக நான் கருதவில்லை. அதை எனக்கு தெரியாத வகையில் எனது பெற்றோர் நன்றாக பார்த்துக்கொண்டனர். 2016-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தயாராகி வந்தேன். முதல் முயற்சியில் முதல்நிலை தேர்வைக்கூட தாண்ட முடியவில்லை. அதன்பின்னர், 2017, 2018-ம் ஆண்டுகளில் நேர்முகத்தேர்வு வரை சென்று வெற்றியை நழுவவிட்டேன். விடாமுயற்சியின் பலனாக இப்போது சாதித்துவிட்டேன். நான் தேர்வுக்கு சென்றுவருவதற்கு எனது அப்பாவும், அம்மாவும் உறுதுணையாக கூடவே வருவார்கள்.

சாதாரணமாக இருந்த நான் வெளியில் பாதுகாப்பாக வந்து தங்குவதற்கும், உணவுக்கும், படிப்புக்கும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம்தான் அடித்தளமாக இருந்தது. ஆரம்பத்தில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், இப்போது நான் வெற்றி பெற்றிருக்கமுடியாது. மேலும், தோல்வி எனக்கு வந்தபோதிலும், ‘கண்டிப்பாக உன்னால் முடியும்’ என்று என்னை ஊக்கப்படுத்தியவர், சைதை துரைசாமி தான். அவருக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன். அவர் தந்த ஊக்கத்தால்தான் வெற்றிமாலை எனக்கு கிடைத்துள்ளது.

மக்களின் எல்லா வகையான பிரச்சினைகளையும் அடித்தட்டில் இருந்து மக்களோடு மக்களாக பார்த்து இருக்கிறேன். அதனால் அவர்களின் பிரச்சினைகளை சரிசெய்வேன். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். என்ன தடைகள் வந்தாலும், இந்த பணிக்கான தேர்வுக்கு நான் முழு மூச்சோடு தயாரானதுபோல், மக்களுக்கான சேவையையும் முழுமூச்சோடு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூர்ணசுந்தரியின் தந்தை முருகேசன் கூறுகையில், ‘ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கஷ்டப்படுகிறவர்களுக்கு எனது மகள் உதவிசெய்வார். அப்படித்தான் நாங்கள் வளர்த்திருக்கிறோம்’ என்றார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி

Related posts

Leave a Comment