தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்: முதல்வர் மீண்டும் உறுதி

திண்டுக்கல்: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும், அதில் மாற்றமில்லை என முதல்வர் இபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் இபிஎஸ் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர், நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார். அப்போது முதல்வர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் மாநில அரசு செய்கிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து இல்லை என்பதால், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு செல்கின்றனர். மேலும் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பால் தான் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 9,105 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது, 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இருமொழிக் கொள்கை

உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தம் மூலம் திண்டுக்கலில் 400 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தொழில் தொடங்கப்பட உள்ளது. 2019ம் ஆண்டு முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 நிறுவனங்கள் ரூ.300 கோடியில் திண்டுகல்லில் தொடங்க உள்ளன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏதாவது பேசி வரும் எஸ்.வி.சேகர், வழக்கு வந்தால் ஒளிந்துகொள்வார். அவர் பாஜ.,வை சேர்ந்தவர் எனில் பிரசாரத்திற்கு ஏன் வரவில்லை? அவர் முதலில் எந்த கட்சியை சேர்ந்தவர்? பாஜ.,வை சேர்ந்த நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுக.,வுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.

இ-பாஸ்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை இ-பாஸ் புதுப்பித்தால் போதுமானது. வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்திற்கு தாராளமாக அழைத்து வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.


Related posts

Leave a Comment