விளை பொருட்களை விற்க விற்பனை மையம் விவசாயிகளை ஊக்குவிக்கும் தோட்டக்கலை

விருதுநகர்:கொரோனா வந்த பின் நமக்கு ‘உணவே மருந்து’ என்பது புரிய துவங்கிவிட்டது. துளசி, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து இயற்கை முறையில் சுடுநீர் அருந்துகிறோம். இதோடு உணவில் மஞ்சள், மிளகு ,சீரகம் அதிகளவில் சேர்த்து கொள்கிறோம். தரமற்ற துரித உணவுகளை தவிர்க்க துவங்கி விட்டோம்.

உணவு பொருட்கள் அனைத்தும் இயற்கை என்றாலும் உண்மையில் ‘இயற்கையா’ என்ற ஐயமும் உள்ளது. பழங்கள், காய்கறிகளில் பூச்சி மருந்து, ரசாயன உரங்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதை தடுக்கும் நோக்கில் இயற்கை விவசாய நடைமுறை களை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தோட்டக்கலை வளர்ச்சி முகமை சார்பில் இயற்கை விவசாய முறையில் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடமிருந்து வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழங்கள், மலை தேன், கொல்லி மலையிலிருந்து பெறப்பட்ட கிராம்பு, லவங்கபட்டை உள்ளிட்ட வாசனை பொருட்கள், கீரை வகைகள் என உணவு பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் விற்கின்றனர்.

இதற்கான விற்பனை மையத்தை கலெக்டர் அலுவலகத்திலும் துவங்கி உள்ளனர்.கிலோ எலுமிச்சை ரூ.45, பப்பாளி ரூ.20, வெண்டை ரூ.17, கத்தரி ரூ.20, வெங்காயம் ரூ.40, முருங்கை ரூ.5, பீர்க்கங்காய் ரூ.35, கீரை வகைகள் ரூ.10, 250 கிராம் தேன் ரூ.130, 100 கிராம் மிளகு ரூ.60, கிராம்பு ரூ.72, லவங்கபட்டை ரூ.48, லவங்க இலை ரூ.12 என குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்லாது பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் விளைபொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்கள் வாங்கப்படுகிறது. இது விருதுநகர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் விருதுநகர் உழவர் சந்தையிலும் இம்மையம் துவங்கப்பட உள்ளது.

Related posts

Leave a Comment