தடுக்கலாமே ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் மாசு

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரத்தில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நகர் , கிராம பகுதிகளில் தினந்தோறும் மக்களால் அதிகப்படியான குப்பை சேர்கின்றன. கிராம பகுதிகளை விட நகர் பகுதிகளில் குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இவைகளின் மூலம் கிடைக்கும் குப்பையை சேகரிக்க ஆங்காங்கே குப்பை தொட்டிகள், நகராட்சி மூலமாக வைத்திருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லை. கழிவுகளும் ரோட்டில் வீசப்படுகின்றன. தொட்டிகள் வைத்திருந்தாலும் முறையாக பயன்படுத்தாது அலட்சிய போக்கினை கடை பிடிக்கின்றனர். குப்பையை உள்ளாட்சி முறையாக சேகரித்து நகரின் வெளிப்பகுதியில்தான் கொட்டி அழிக்க ,எரிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. எங்கு குப்பை அதிகம் சேர்கிறதோ அங்கேயே எரித்து விடுகின்றனர்.

இதனுடன் பாலிதீன் பொருட்களும் எரிவதால் புகையால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நிறைந்த ரோட்டில் எரிப்பதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. தீயின் வெப்பத்தால் டூ வீலர், சைக்கிள் ,நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இதேநிலைதான் கிராம பகுதிகளிலும் உள்ளது.

காற்று மாசால் சிரமம்

வாகனங்களால் காற்று மாசுபடுதலே பெரும் சிரமமாக உள்ள நிலையில் குப்பையும் எரிப்பதால் காற்று முற்றிலும் மாசுபடுகிறது. இதை சுவாசிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. குப்பையை முறையாக சேகரித்து நகருக்கு வெளியே அதற்கான இடத்தில் கொண்டு சென்று மறு சுழற்ச்சி செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் முன் வர வேண்டும்.

மைக்கேல்,தனியார் ஊழியர்,சிவகாசி.

Related posts

Leave a Comment