எம்.எல்.ஏ.,க்களுக்கு செல்வாக்கு எப்படி? ஆளும் கட்சி அதிரடி; உளவுத்துறை ‘சர்வே’

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, ஆளும் கட்சியான, அ.தி.மு.க., தயாராகி வரும் நிலையில், ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து, உளவுத்துறை, ரகசிய, ‘சர்வே’ எடுத்து வருகிறது.

தமிழகத்தில், மார்ச், 25ல் துவங்கிய ஊரடங்கு, வரும், 31ம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

தேர்தலுக்கு தயார்

தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, சில மாதங்களே உள்ளன. எனவே, அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு தயாராக துவங்கி உள்ளன. தற்போதுள்ள கூட்டணி தொடருமா அல்லது மாறுமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும், தங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க., தலைமை, தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அதிருப்தியாளர்களை சரிக்கட்ட, இரண்டு அல்லது மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர் என, நியமிக்கப்பட்டு உள்ளனர். அதற்கேற்ப, துணை நிர்வாகிகள் நியமனமும் நடந்து வருகிறது.

தற்போதைய அமைச்சர்களில், ஓரிருவர் தவிர மற்றவர்கள், மாவட்ட செயலர்களாக உள்ளனர். அதேபோல, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர், மாவட்ட செயலர்களாக உள்ளனர். மாவட்ட செயலர்களாக இருப்பதால், தங்களுக்கு சட்டசபை தேர்தலில், ‘சீட்’ உறுதி என்ற, நம்பிக்கையில் உள்ளனர்.

அதேபோல, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள, சட்டசபை தொகுதிகளில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, சீட் வாங்கி கொடுக்க முடியும் என்றும் நினைக்கின்றனர். தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் களில் பலர் மீது, அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி மக்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.


வெற்றி பெறுவது கடினம்

அவர்களுக்கு மீண்டும், சீட் கொடுத்தால், வெற்றி பெறுவது கடினம் என்ற, சூழ்நிலை உள்ளது.எனவே, தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களில், மீண்டும், சீட் கொடுத்தால், வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் யார் என்பதை கண்டறியும் பொறுப்பை, உளவுத்துறையிடம், ஆளும் கட்சி தலைமை ஒப்படைத்துள்ளது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மாவட்ட செயலர்களாக உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு, சீட் நிச்சயம் என்ற நினைப்பில் உள்ளனர். ஆனால், வெற்றி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, சீட் கொடுப்பதை, கட்சி தலைமை விரும்பவில்லை.எ னவே, அவர்கள் குறித்து, சர்வே எடுக்கப்படுகிறது.


உறுதி

வெற்றி வாய்ப்பில்லாத அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு பதிலாக, புதியவர்கள், இளைஞர்களுக்கு, வாய்ப்பு வழங்கினால், மக்கள் ஏற்பர் என, கட்சி தலைமை கருதுகிறது. அதற்கு உடன்பட மறுத்து, எதிர்ப்பு தெரிவிக்கப்படுமானால், அந்த தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமே தவிர, அவர்களுக்கு வாய்ப்பு தரப்படாது. அதில், தலைமை உறுதியாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


அதன்படி, தற்போதைய, எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார் விபரங்களை சேகரிப்பதுடன், அவர்களுக்கு தொகுதி மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்தும், உளவுத்துறை போலீசார், ஆய்வு செய்து வருகின்றனர். இதில் தேறுவோருக்கு மட்டுமே, தேர்தலில் வாய்ப்பு வழங்க, கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது, எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

Leave a Comment