அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி! கல்லூரியை திறக்கும் திட்டமா?

சென்னையில் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இன்றி திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் என பெரிய கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி! கல்லூரியை திறக்கும் திட்டமா?

சமீபத்தில் அவ்வாறு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை மையம் காலி செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அண்ணா பல்கலை.,யின் நிலை மற்றும் தேர்வு குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.

தேர்வுகள் ஒத்திவைப்பு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து கல்வி நிறுவனங்களைத் திறக்க முடியாத சூழல் நிலவி வருவதால் மாணவர்கள் மத்தியில் இதுகுறித்தான பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

பொறியியல் தேர்வுகள் இதனிடையே, கடந்த மாதம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி தேர்வுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்தது.

யுஜிசி அறிவுரை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது.

டிசம்பர் வரையில் தேர்வு இல்லை

டிசம்பர் வரையில் தேர்வு இல்லை இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடங்குவது தாமதமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் zero academic year அறிவிக்கப்படாது என உயர்கல்வி செயலர் அமித் காரே நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் சமீபத்தில் பேசிய தகவல் வைரலானது.

அண்ணா பல்கலையின் முடிவு பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என அண்ணா பல்கலைக் கழகம் ஏற்கனவே அறிவித்தது. மேலும், கொரோனோ தொற்றின் தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா முகாமான கல்லூரிகள் இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன

கொரோனா வார்டான அண்ணா பல்கலை அதன்படி, சென்னையில் லட்சக் கணக்கானோர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இன்றி அண்ணா பல்கலைக் கழகமும் சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டது. முன்னதாக, பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா பரிசோதனை செய்தவர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கடிதம் எழுதியது.

சிறப்பு மையமான பல்கலைக் கழக விடுதி

சிறப்பு மையமான பல்கலைக் கழக விடுதி கடந்த மாதங்களில் கொரோனாவினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

1300 படுக்கைகள் சென்னையில் மட்டுமே லட்சக் கணக்கான மக்கள் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,300 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

அண்ணா பல்கலை., காலி தற்போது சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதால் அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து, சிகிச்சை அளிப்பதற்கான செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு வருகின்றன.

11 ஆயிரம் பேர் மட்டுமே பாதிப்பு தற்போது, சென்னையைப் பொறுத்தவரையில் 11,130 பேர் மட்டுமே கொரோனா தொற்றினால் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் காலியாகி வருகின்றன.

அண்ணா பல்கலையில் இப்போது எத்தனை பேர்?

அண்ணா பல்கலையில் இப்போது எத்தனை பேர்? அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் கிண்டி கொரோனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், அண்ணா பல்கலையில் சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் பணியைத் தொடங்கும் வகையில் படுக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகள் அப்படியே இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வழியில் பருவத் தேர்வு பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்களுக்குத் தேர்வு வைக்க வேண்டியதன் அவசியம் கருதி விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வை எழுதுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment