நிலத்தடி நீரை காக்கும் விவசாயிகள்

விருதுநகர்:சாத்துாரில் கிராம மக்கள் தங்களின் வயலில் பண்ணை குட்டை அமைத்து நிலத்தடி நீரை பெருக்குவதோடு மீன் வளர்ப்பின் மூலமும் உபரி வருமானம் ஈட்டி ஓசையின்றி சாதனை படைத்து வருகின்றனர்.

வறட்சியான மாவட்டங்களில் ராமநாதபுரத்தை அடுத்து விருதுநகரும் உள்ளது. மழையை நம்பியே விவசாயம் நடக்கிறது. மானாவாரியாக விதைப்பதன் மூலம் பயிர் விளைந்தால் லாபம். இல்லையேல் நஷ்டம் என்ற நிலை தொன்று தொட்டு நிலவுகிறது. பட்டாசு தயாரிப்பில் சிவகாசியை அடுத்து சாத்துார் முதலிடம் வகிக்கிறது.

கிராமங்கள் தோறும் பெண்கள் பகுதி நேரமாகவும், ஆண்கள் முழு நேரமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நேரம் முடிந்ததும் வயல்களில் இறங்கி விவசாய பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.அவரவர் சொந்த இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து வீடுகளுக்கு தேவையான நிலத்தடி நீராதாரத்தை தக்க வைத்து கொள்கின்றனர்.

மீன் வளர்த்து அதன் மூலமும் உபரி வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர். இதோடு வைப்பாற்று படுகைகளில் மணல் திருட்டு நடக்காமல் தடுக்கும் அரணாகவும் கிராம மக்கள் செயல்படுகின்றனர். இதன் மூலம் ஆற்றின் அருகிலுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வற்றாமல் உள்ளது. இதனால் கிணற்று பாசனமும் சாத்தியமாகி வருகிறது.

Related posts

Leave a Comment