விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி:மோடி சுதந்திர தின உரை

புதுடில்லி :”கொரோனா தடுப்பூசி, கூடிய விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. விஞ்ஞானிகள் ஒப்புதல் கிடைத்ததும், தடுப்பூசியை அதிக அளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும்,” என, சுதந்திர தினத்தன்று உரை நிகழ்த்திய, பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாட்டின், 74வது சுதந்திர தினத்தையொட்டி, நேற்று பிரதமர் மோடி, டில்லியில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று, மலர் துாவி, அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின், செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, பிரதமர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். இந்த கொரோனா காலத்தில், முன் களத்தில் நின்று போராடும் டாக்டர், சுகாதார பணியாளர், நர்சுகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நாளில் நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா வைரஸ் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், இதற்கான தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என்று தான், நம் மனதில் கேள்வி எழுகிறது.

இந்த நேரத்தில் மக்களுக்கு ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக, ரிஷிகள் போல், நம் விஞ்ஞானிகள்ஆய்வகங்களில் கடுமை யாக போராடி வருகின்றனர்.கொரோனா வைரசை குணப்படுத்துவதற்காக, நம் விஞ்ஞானிகள் மூன்று தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளனர். அந்த மருந்துகள், வெவ்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.இந்த முயற்சி வெற்றி அடைந்து, விஞ்ஞானிகள் ஒப்புதல் கிடைத்ததும், அதிக அளவில் தடுப்பூசி மருந்தை தயாரித்து, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன.


மருந்து தயாரான பின், எவ்வளவு விரைவில் முடியுமே, அவ்வளவு விரைவில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடையாள அட்டைநாட்டு மக்கள் ஒவ்வொருவரது நலனிலும், மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது. மக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில், ‘நேஷனல் டிஜிட்டல் ஹெல்த் மிஷன்’ எனப்படும், தேசிய மின்னணு சுகாதாரத் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது.நம் நாட்டின் சுகாதாரத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, இந்த திட்டம் அமையும். இந்த திட்டத்தின்படி, நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே, அடையாள அட்டை வழங்கப்படும். இதில், ஒவ்வொருவரது உடல் நலன் தொடர்பான அனைத்து விபரங்களும் இடம் பெற்றிருக்கும். சிகிச்சை பெறுவதற்கும், மருந்து வாங்குவதற்கும் இந்த அடையாள அட்டையை மக்கள் பயன்படுத்தலாம். டாக்டரிடம் சிகிச்சைக்காக செல்லும்போது, சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட விபரங்களும் அந்த அட்டையில் இடம் பெறும்.

டாக்டரை பார்ப்பதற்காக முன் அனுமதி பெறுவதற்கும் இந்த அட்டையை பயன்படுத்தலாம். இந்த அட்டையால், நோயாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசியும் என்ற அச்சம் வேண்டாம். தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும்.நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், குறிப்பிட்ட நேரம் மட்டுமே, அந்த அட்டையில் உள்ள டிஜிட்டல் விபரங்களை பார்க்க முடியும் வகையிலும், நேரக் கட்டுப்பாடுடன் கூடிய தொழில்நுட்ப வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும், வெளிப்படையானதாக மாற்றும் வகையிலும் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ‘டெலிமெடிஷன்’ திட்டத்துக்கும் இந்த அட்டையை பயன்படுத்தலாம்.

எல்லையில் பதிலடிஎல்லை பகுதியில், நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டவர்கள், அத்துமீறியவர்களுக்கு, நம் ராணுவம், தகுந்த பதிலடி கொடுதுள்ளது. அவர்கள் எந்த வழியை பின்பற்றினரோ, அதே வழியில் நம் வீரர்கள், அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இறையாண்மையை பாதுகாக்கும் விஷயத்தில், நாட்டு மக்கள் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து ஆதரவு தந்தனர்.பயங்கரவாதமாக இருந்தாலும், அத்துமீறலாக இருந்தாலும், நம் நாடு, அதை ஒடுக்குவதற்காக, உறுதியுடன் எதிர்த்து போராடும்.லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த அத்துமீறலை, நம் வீரர்கள் துணிச்சலுடன் முறியடித்ததை, இந்த உலகமே வியப்புடன் பார்த்தது.அந்த உறுதிமிக்க வீரர்களுக்கு, இந்த நேரத்தில் மரியாதை செலுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு என், ‘சல்யூட்’டை தெரிவிக்கிறேன்.

அண்டை நாட்டினரை, நம்முடன் எல்லைகளை பகிர்ந்து கொள்பவர்களாக மட்டும், நாம் கருத வில்லை.இதயப்பூர்வமாகவும், நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களாகவும் அவர்களை கருதுகிறோம். இது போன்ற நட்புறவைத் தான், இந்தியா மதிக்கிறது. இது போன்ற நாடுகளுடன் தான், நெருக்கமாகஇருக்கிறோம்.தற்சார்பு இந்தியா தற்சார்பு இந்தியா என்ற கோஷம், தற்போது நாட்டு மக்களின் மந்திரச் சொல்லாக மாறியுள்ளது. எத்தனை காலத்துக்குத் தான், முக்கியமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது…எல்லா பொருட்களையும் நாமே தயாரிக்க வேண்டும். பொருட்களின் தேவையில், தன்னிறைவை எட்டுவதுடன், உலகின் மற்ற நாடுகளுக்கும் நாம் ஏற்றுமதி செய்ய வேண்டும். இறக்குமதியை குறைப்பதுடன், தயாரிப்பு துறையில் நம் திறமையையும், படைப்பாற்றலையும் அதிகரிக்க வேண்டும்.


சமீப காலமாக உலகின் முன்னணி நிறுவனங்களின் பார்வை எல்லாம் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. உலகம் முழுதும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக, நாம் உருவெடுக்க வேண்டும். இது தான், நம் லட்சியமாக இருக்க வேண்டும். கொரோனா காலத்தில், முக கவசம், பாதுகாப்பு உடைகள் தயாரிப்பதில், நாம், மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக செயல்பட்டோம். நமக்கு தேவையான முக கவசம், பாதுகாப்பு உடைகளை நாமே தயாரித்ததுடன், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம். நம் தயாரிப்புகள் உலகத் தரம் வாய்ந்ததாக இருந்தன. கட்டமைப்பு துறையில் பல்வேறு புரட்சிகளை நாம் ஏற்படுத்தி உள்ளோம். பல்வேறு துறைகளில், 70 ஆயிரம் கட்டமைப்பு திட்டங்களை அடையாளம் கண்டுள்ளோம். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கட்டமைப்பு துறையில், 110 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் தயாரிப்போம்;உலகிற்காக தயாரிப்போம்’ என்பது தான், நம் லட்சியம்.விவசாயத்தில் சீர்திருத்தம்கடந்த சில ஆண்டுகளில் விவசாயத் துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயத் துறைக்கு இருந்த அனைத்து தடைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும், சுதந்திரமாக விற்பனை செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை தற்சார்புள்ளவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோப்பு, துணி போன்றவற்றை எங்கு வேண்டுமானாலும் தடையின்றி விற்பனை செய்யும்போது, விவசாய பொருட்களை விற்பதற்கு மட்டும் ஏன், கட்டுப்பாடும், தடையும் இருக்க வேண்டும்.விவசாயத் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, சமீபத்ததில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கும் நவீன, தடையற்ற இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடுத்த, 1,000 நாட்களில், ஆறு லட்சம் கிராமங்களை, ‘ஆப்டிகல் பைபர் நெட்ஒர்க்’குடன் இணைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய கல்வி கொள்கை!பிரதமர் மோடி, தன் சுதந்திர தின உரையில் மேலும் பேசியதாவது:இந்தியாவை தற்சார்புள்ள நாடாக மாற்றுவதற்கு, புதிய கல்விக் கொள்கை பெரிதும் உதவும். புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்ற விஷயத்தில், வளர்ச்சி அடைந்த நாடுகளின் மாணவர்களுடன், நம் மாணவர்கள் போட்டியிடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த கல்விக் கொள்கையில் உள்ளன. இந்த புதிய கல்விக் கொள்கை, 21ம் நுாற்றாண்டுக்கான புதிய இந்தியாவை வடிவமைக்கும். புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளுமே, நம் நாட்டை சக்தி வாய்ந்ததாக மாற்றும்.’ஆன்லைன்’ வகுப்புகள், நம் கிராமப்புறங்களை எட்டும் என, எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறோமா… ஆனால், இந்த கொரோனா பேரிடர் காலத்தில், அது சாத்தியமாகியுள்ளது. பேரிடர் காலம், நமக்கு, அதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


பெண்களுக்கான திட்டங்கள்சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி குறிப்பிட்டதாவது:ஏழைகள் மற்றும் நம் மண்ணின் மகள்கள், சகோதரிகளின் உடல் நலனில், மத்திய அரசு மிகவும் அக்கறை வைத்துள்ளது. இதற்காகவே, மலிவு விலை மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன. நாடு முழுதும், 6,000 மலிவு விலை மருந்துக் கடைகள் வாயிலாக, ஐந்து கோடி பெண்களுக்கு, 1 ரூபாய் விலையில், ‘சானிட்டரி நாப்கின்’வழங்கப்பட்டது. பெண்களின் திருமண வயது வரம்பை நிர்ணயிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, என் தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.விமானப் படை, கடற்படையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பெண்களில் பலர், தலைவர்களாகவும் உருவெடுத்துள்ளனர். இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment