கைகொடுக்கும் கைவினை பொருட்கள்: தள்ளாத வயதிலும் சாதிக்கும் மூதாட்டி

அருப்புக்கோட்டை:உழைத்தால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்து வருபவர் பலருண்டு. உடல் உழைப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கும் வகையில் 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகும் பலர் உழைக்கின்றனர்.

உழைப்பால் மகுடம் சூட்டிய எண்ணற்றோர் வரிசையில் அருப்புக்கோட்டை மெட்டுக்குண்டுவை சேர்ந்த மாரியம்மாளும் ஒருவர். சிறு வயதில் பள்ளியில் கற்றுக்கொடுத்த கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சியை தனது 62 வயதிலும் நுணுக்கமாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து வருகிறார்.

அவர் கூறியதாவது: பள்ளி பருவத்தில் கைவினை ஆசிரியை ஒயர் கூடை பின்னுவதை கற்று கொடுத்தார். நான் உட்பட சக மாணவிகள் ஆர்வத்துடன் கற்று கொண்டோம். அதன் பயனாக பல ஆண்டுகளாக ஒயர் கூடைகளை பல டிசைன்களில் தயாரித்து வருகிறேன். விவசாய பணிகளை முடித்தபின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றி உள்ளேன்.

குறிப்பாக மதியம் குட்டித்துாக்கத்தை தவிர்த்து கைவினை பொருள் தயாரிப்பில் கவனத்தை செலுத்துகிறேன். பூஜை கூடை, காய்கறி கூடை, லஞ்ச் பேக், ஸ்கூல் பேக், டிபன் பாக்ஸ் கூடை என விதவிதமாக தயாரிக்கிறேன். இதனால் சொற்ப வருவாய் கிடைக்கிறது. உடல் உழைப்பாலும் கைகளுக்கும் வேலை கொடுப்பதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதை மற்ற பெண்களுக்கும் இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன். இதன் மூலம் பலர் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர், என்றார்.

Related posts

Leave a Comment