பீடுநடை போடும் ‘குள்ள தம்பதி’: ஊனத்திலும் தளராத தன்னம்பிக்கை

விருதுநகர்:விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டியை சேர்ந்த குள்ளத்தம்பதி தங்களின் ஊர் எல்லையில் வெட்ட வெளியில் கடை நடத்தி தங்களின் அன்றாட குடும்ப செலவுகளை ஈடுகட்டி பிறருக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் எண்ணற்றோர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த சின்னதாதம்பட்டி குள்ளத்தம்பதி முத்துப்பாண்டி 39, மீனாலட்சுமி 31, சோர்ந்து விட வில்லை. தங்களின் ஊர் எல்லையில் வெட்ட வெளியில் கடை நடத்தி தங்களின் அன்றாட குடும்ப செலவை சமாளித்து வருகின்றனர். இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் முடிந்தது.

இடைநிலை ஆசிரியையான மீனாலட்சுமி விருதுநகர் சுப்பையாநாடார் உயர் நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியையாக இருந்தார். டாஸ்மாக் பாரில் முத்துப்பாண்டி வேலை பார்த்தார். கொரோனாவால் இருவரும் வேலையை இழந்தனர்.தம்பதி கூறியதாவது: மாற்றுத்திறனாளி உதவி தொகை இருவருக்கும் தலா ரூ.1000 கிடைக்கிறது. விலை வாசி உயர்வால் உதவி தொகை போதுமானதாக இல்லை. எங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கினால் பேருதவியாக இருக்கும்.

எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளை ஊக்கபடுத்தும் விதமாக அரசு உதவிட வேண்டும். கொரோனாவால் ஊதியம் இழந்து தவித்த நாங்கள் ஊரின் எல்லையில் சிறிய டேபிள் வைத்து பலகாரங்களை விற்று வருகிறோம். தினமும் ரூ.50 முதல் ரூ.75 வரை கிடைக்கிறது. சொற்ப வருமானத்துடன் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்க்கையை செம்மையாக நடத்தி வருகிறோம், என்றனர்.

உதவிட விரும்புவோர் 77086 04127ல் ஹலோ சொல்லலாம்.

Related posts

Leave a Comment