ஊரணிக்கு உயிர் கொடுத்த இளைஞர்கள்

ராஜபாளையம்:போதிய மழை இல்லாமை,பெய்யும் மழை நீரை சேமிக்க தவறியது, பெருகி வரும் மக்கள் தொகை என்பன போன்ற காரணங்களால் நிலத்தடி நீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.

ராட்சத குழாய்களால் முறையற்ற வகைகளில் நிலத்தடிநீரும் உறிஞ்சப்படுவதால் பெரும்பாலான கிணறுகள் வறண்டு விட்டன. குடிதண்ணீர், விவசாயம் என இரண்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதன் தேவையை உணர்ந்த ராஜபாளையம் பச்சமடம் பகுதி இளைஞர் சங்கத்தினர் ஒன்று கூடி இங்குள்ள பச்சமடம் ஊரணியை 2017 ல் துார் வாரினர். முறையாக பராமரித்து தற்போது வரை சாக்கடை கலக்காது துாய நீராக பராமரித்து வருகின்றனர். இதற்காக இப்பகுதி இளைஞர் குழுவினர் ஒன்றினைந்துரூ. 10 லட்சம் வரை சமுதாய பெரியோர்களிடம் வசூலித்து ஊரணி சுற்று பகுதிகளை சோலையாக்கி உள்ளனர்.

ஊரணியில் தண்ணீர் ததும்ப சுற்றுப்பகுதியில் உள்ள மங்காபுரம், கம்மாபட்டி, எம்.ஆர் .நகர் 2 ஆயிரம் மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டுள்ளனர். மழை காலங்களில் வரும் நீருடன் கழிவு நீர் கலந்து வராதபடி ஷட்டர் அமைப்பை ஏற்படுத்தி மழை நீரை சேமிக்கும் முறையையும் கையாண்டுள்ளனர்.
ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு, நீர் ஆவியாவதை கட்டுப்படுத்த தாமரை விதைகளை பரவ விட்டு அதன் செடிகள் வளர்ந்து நீரை பாதுகாக்கும் வழிகளையும் செய்துள்ளனர். இவர்களின் இத்தகைய சிறப்பு பணிகளால் சுற்றுப்பகுதிகள் கோடை காலத்திலும் தேவையான நிலத்தடி நீரை பெற முடிகிறது.

Related posts

Leave a Comment