லாபம் அள்ளி தரும் சிப்பி காளான்: விரும்புவோருக்கு இலவச பயிற்சி

காரியாபட்டி:மழைக்காலத்தில் இயற்கையாக காளான்கள் முளைக்கும். அவற்றை சேகரித்து சமைத்தால் அவ்வளவு ருசியாக பக்கத்து வீடு வரை மணம் வீசும். அது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன.

தற்போது மழை பொழிவு இருந்தால் கூட இயற்கை மாற்றத்தால் முன்பு போல் அதிக அளவில் காளான்கள் முளைப்பதில்லை. அப்படியே முளைத்தாலும் அதை தேடிப் பிடித்து சேகரிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இந்த சூழ்நிலையில் தான் செயற்கைமுறை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதை வளர்க்க பலர் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். இயற்கை காளான்களை போல் ருசி, மணம் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல லாபம் உள்ள தொழிலாக இருப்பதால் இத்தொழிலை செய்ய பலரும் முன்வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த ராமலிங்கம் காரியாபட்டி கரியனேந்தலில் சிவபாலா இயற்கை காளான் பண்ணை என்ற பெயரில் 4 ஆண்டுகளுக்கு மேலாக பட்டன், சிப்பி காளான்களை உற்பத்தி செய்து வருகிறார் அவர் கூறியதாவது: எங்களது தொழில் விவசாயம். போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. எப்படியாவது பிழைப்பு நடத்த வேண்டும். அதற்காக ஒரு தொழில் செய்ய வேண்டும். அதுவும் விவசாயம் சார்ந்த தொழிலாக இருக்க வேண்டும்.

விவசாய கழிவுகளிலிருந்து இயற்கை முறையில் காளான் உற்பத்தி செய்ய முடிவு செய்து அதை குறைந்த விலைக்கு மக்களிடத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காளான் வளர்ப்பு முறை குறித்து பயிற்சி எடுத்தேன். பட்டன், சிப்பிக்காளான் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறேன். மக்கள் மத்தியில் கிராக்கி உள்ளது.

நவீன தொழில் நுட்பத்தில் காளான் தொழில் செய்ய விரும்புவோருக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். நல்ல லாபம் கிடைப்பதால் இதை வளர்க்க பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், என்றார்.தொடர்புக்கு 99439 23641.

Related posts

Leave a Comment