உற்சாகம் ஊட்டும் ஊஞ்சல்: ஊரடங்கிலும் சிறார்கள் குஷி

சிவகாசி:வாழ்க்கையில் பொழுது போக்குதல் முக்கிய இடம் வகிக்கிறது.இது மனிதருக்கு மனிதர் மாறுபடும். இசை விளையாட்டு, திரைப்படம் என வகைப்படுத்திக்கொண்டே போகலாம். கொரனா ஊரடங்கால் பொழுதை போக்குதல் ஒவ்வொருவருக்கும் கடினமான ஒன்றாக உள்ளது.

நகர்பகுதியினர் மாணவர்கள் அலைபேசி மூலம் சமூக வலைதளங்களிலே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் கிராம சிறார்கள் இன்றும் ஒன்றுகூடி விளையாடி குதுாகலமாக இருப்பதை காணமுடிகிறது. விளையாடுவதால் ஒவ்வொருவரின் தனித்திறமையும் வளர்கிறது.

இதில் ஊஞ்சல் ஆட்டம் பொழுதினை போக்குவதோடு எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கிறது. மனதில் மகிழ்ச்சி, உடலுக்கு புத்துணர்ச்சியும் கொடுக்கிறது. இதனால்தான் திருமண வீடுகளில் பொன்னுாஞ்சலாடும் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கும் ரத்தம் சீராக செல்கிறது.அதற்கேற்ப சிவகாசி மாரனேரி ஈஸ்வரன் காலனி சிறார்கள் மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்கின்றனர். ஊரடங்கால் இக்கிராமத்தினருக்கு பொழுது போக்காக ஊஞ்சல் ஆட்டமே கை கொடுக்கிறது.

மர நிழலே ஒரு அற்புதம். அதில் ஊஞ்சல் கட்டி ஆடுவது மிகவும் அற்புதம். இங்குள்ளவர்களும் உற்சாகமாக சமூக இடைவெளியோடு ஊஞ்சல் ஆடுகின்றனர். ஒரே இடத்தில் அதிக ஊஞ்சல்களில் சிறார்கள் மேலும் கீழும் சென்று ஆடுவதை பார்ப்பதே தனி அழகு. எந்த கவலையும் இன்றி சிறார்களுக்கான சேட்டைகளுடன் ஆடுவதை பார்ப்பதே தனி சுகம் தான். இதோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து விளையாடுவது அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்துகிறது.

Related posts

Leave a Comment