தூய்மை நகரில் 175வது இடம்: பின்நோக்கி செல்லும் விருதுநகர்

விருதுநகர்:மாவட்ட நகரங்கள் வழக்கம் போல் துாய்மை நகர தரவரிசை பட்டியலில் பின்தங்கிய நிலையில் விருதுநகரும் 175வது இடத்தை பிடித்துள்ளது.

ஆண்டு தோறும் மத்தியரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் கீழ் சுவட்ச் சர்வேக் ஷன் இணையத்தில் துாய்மை நகரங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தாண்டும் விருதுநகர் மாவட்ட நகரங்கள் வழக்கம் போல் பின்தங்கிவிட்டன.

சாத்துார் 63 , விருதுநகர் 175 , ஸ்ரீவில்லிபுத்துார் 93, சிவகாசி 100, அருப்புக்கோட்டை 103, திருத்தங்கல் 107, ராஜபாளையம் 260 என 7 நகராட்சிகளுமே பின்தங்கி உள்ளன.மத்திய அரசின் துாய்மை திட்டத்தை முறையாக கடைப்பிடிக்காததால் இன்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்படாத நிலைதான் உள்ளது.

அதே போன்று சாக்கடை கழிவுநீர், ஆங்காங்கே குப்பை என கொரோனா காலகட்டங்களில் கூட நகராட்சிகளின் பணிகளில் அதிருப்தியே தொடர்ந்தது. விருதுநகர் நகராட்சி நுழைவு பகுதியான நாகம்மாள்கோயில் கணேஷ்நகர் குடியிருப்பு பகுதியில் பன்றிகள் வளர்ப்போரை இன்றளவும் நகராட்சி நிர்வாகம் தட்டி கேட்கவில்லை.

இப்படியேபோனால் விருதுநகருக்கு அடுத்தாண்டு கடைசி இடம் தான் கிடைக்கும்போலும். செயல்படாத சுகாதார வளாகங்களை திறந்தாலே திறந்தவெளி கழிப்பிடத்திற்கு தீர்வு கிட்டும். இதே போன்று குப்பை அகற்றல், பிற சுகாதார பணிகளிலும் அலட்சியமே தொடர்கிறது.

Related posts

Leave a Comment