ரசாயன கழிவுகளால் விஷமான புனித நதி: அரசு துறைகளின் அசட்டையால் பாழான நீராதாரம்

சாத்துார்:சாத்துாரில் வைப்பாறு நதியில் ரசாயன கழிவுகள், சாக்கடை நீர் கலந்து விஷத்தன்மையாக மாறி வருவதால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் வைப்பாறு நதி தேனி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாக 130 கிலோ மீட்டர் துாரம் பயணித்து துாத்துக்குடி மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. இந்நதி நீர் மூலம் தேனி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 288 சதுர கிலோ மீட்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஆற்றில் மணல் கொள்ளை தினமும் அரங்கேறி வருவதால் மணல் இல்லாத வறட்டாறு போல் வைப்பாறு நதி காட்சியளிக்கிறது. வைப்பாறு நதி பாயும் பகுதிகள் முழுவதும் 15 முதல் 20 அடி ஆழத்துக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது.

சாத்துார் ஆற்று படுகைகளில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி விட்டது. போதாக்குறைக்கு சாக்கடை கழிவுகள், பட்டாசு ஆலை கழிவுகளை கொட்டி குப்பை மேடாக்கி விட்டனர். குடிநீர் ஆதரமாக விளங்கும் நதியில் ரசாயன கழிவுகள், சாக்கடை கழிவுநீர் சங்கமிப்பதால் தண்ணீர் விஷத்தன்மையாக மாறி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த இயலாத அபாயம் ஏற்பட்டுள்ளது.

மணல் திருடப்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் பச்சை, நீலம், மஞ்சள் என பல வண்ணங்களாக மாறி நுரை தள்ளிய நிலையில் காட்சியளிக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் புனித நதியான வைப்பாறு நதி கண் முன்னே வறட்டாறு ஆகி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

Leave a Comment