பார்ப்போரை ஓவியமாக்கும் இளைஞர்

அருப்புக்கோட்டை:முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓவியக்கலை இருந்துள்ளது என்பதை வரலாற்று சான்றுகள் கூறுகிறது. நாகரீகம் வளர ஓவிய கலை பல்வேறு பரி ணாமங்களில் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஓவியம் வரைதல் பிற அழகியல் செயல்பாடுகளை உள்ளடக்கி துணி, பேப்பர், கண்ணாடியில் வரையப்படுகிறது. இன்றைய காலத்தில் ஓவியங்கள் வரைய பலநிற வண்ணங்கள், பென்சில்கள், மெழுகுகள் பயன்படுத்தப்படுகின்றன.ஓவியம் தீட்ட தெளிவான சிந்தனை, கற்பனை திறன், பொறுமை போன்ற காரணிகள் அவசியம்.

ஓவியத்தை கஷ்டப்பட்டு வரைதல் கூடாது. இஷ்டப்பட்டு வரையும் ஓவியமே உயிரோட்டமாக இருக்கும். அந்தவகையில் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் சிறிய வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் மிக்கவர். பென்சில்களை பயன்படுத்தி விதவிதமான ஓவியங்கள் வரைகிறார்.

பிளஸ் 2 முடித்துள்ள கிராம இளைஞரான இவர் பெயர்பலகை, ஷன் போர்டுகள் போன்றவற்றை எழுதிக் கொடுக்கும் பணியை செய்து வருகிறார். தொழிலில் மும்முரமாக இருந்தாலும், ஒருவரை பார்த்து தத்ரூபமாக வரைவதில் திறன் மிக்கவர். தற்போது கொரோனா காலமாக இருப்பதால், தொழில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து கொண்டே நடிகர்கள், தலைவர்கள் படங்களை பார்த்து அப்படியே அச்சு அசலாக பென்சில்களை பயன்படுத்தி வரைந்துள்ளார்.ஒரு படம் வரைய 10 மணி நேரத்திற்கு மேலாகிறது என கூறும் இவர் சில நுணுக்கங்களை கற்று கொண்டு பென்சில் ஓவியத்தில் மேலும் சாதிக்க வேண்டும் என்கிறார். இதோடு பலருக்கு ஓவியம் வரையவும் கற்று கொடுக்கிறார். பாராட்ட 97897 17495.

Related posts

Leave a Comment