மருத்துவமனையில் இல்லை தீவிர சிகிச்சை பிரிவு

காரியாபட்டி:காரியாபட்டி அரசு மருத்துவமனையில் போதிய இடம் வசதி இருந்தும் இங்கு தீவிர சிகிச்சை பிரிவு இல்லாததால் விபத்தில் சிக்கும் நோயாளிகள் பலியாவதும் தொடர்கிறது.

காரியாபட்டியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. காய்ச்சல், தலைவலி, பிரசவம் உள்ளிட்ட அனைத்திற்கும் காரியாபட்டி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். தினமும் 500 க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். நான்கு வழி சாலையில் நடக்கும் விபத்து, மற்ற இடங்களில் நடக்கும் விபத்துகளுக்கு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முதலுதவி செய்து மதுரை, விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.அவ்வாறு கொண்டு செல்லும் போது குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. ஆபத்தான நிலையில் கொண்டு செல்பவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் உயிர்பலி ஏற்படுகின்றன.

பல உயிர்கள் பலியாகியும் இன்னும் இங்கே தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அதிகாரிகளுக்கு ஏற்படவில்லை. மேலும் பல உயிர்கள் பலியாவதற்குள் தீவிர சிகிச்சை பிரிவை ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் முனைப்பு காட்ட வேண்டும்.

Related posts

Leave a Comment