நீட் பலிபீடம்.. நீட் கூட்டுத்துரோகம்.. அனிதாவுக்காக டுவிட்டரில் கொதித்த.. ஸ்டாலின்.. உதயநிதி

சென்னை: நீட் பலி பீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூக நீதிப் போராளி அனிதா.. என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் இந்த நீட் கூட்டுத்துரோகத்துக்கு தங்கை அனிதா பலியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தவர் அனிதா. மருத்துவ கனவை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அவருக்கு நீட் தேர்வுக்கு எதிராக தோல்வியே கிடைத்தது. இதனால் விரக்தி அடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

Anitha death anniversary: mk stalin and udhayanidhi stalin tribute in twitter

12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் அவரால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்கு அப்போது கொண்டுவரப்பட நீட் தேர்வு காரணம் என்பதால் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் அனிதா உயிரிழந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி! நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!” என்று கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் “சுயநல அடிமைகள்-வஞ்சக சாடிஸ்ட்டுகள்-இடறிவிட்ட நீதி… இந்த நீட் கூட்டுத்துரோகத்துக்கு தங்கை அனிதா பலியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏழை, எளிய கிராமத்து மாணவ, மாணவிகளின் மருத்துவர் கனவை நசுக்கும் நீட் தேர்வுக்கு முடிவுகட்டுவோம் என நம் தங்கையின் இந்நினைவு நாளில் உறுதியேற்போம்!” என்று கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment