சிவகாசியில் கண்மாயின் நடுவே காடு: தனித்தீவாக உருவாக்குது எக்ஸ்னோரா

சிவகாசிமழை வேண்டும் என்றால் மரக்கன்றுகள் நட வேண்டும். அரசும் மரக்கன்று நடுவதை ஊக்குவித்து வருகிறது. மழை பெய்ய மரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சுத்தமான காற்று கிடைக்கவும் மரம் முக்கியமாகிறது.ஆனால் இதனை யாரும் உணர்வதில்லை. பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு மரம் நடுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மரங்கள் மொத்தமாக ஒரே இடத்தில் காடாக காட்சியளித்தால் அப்பகுதியில் மழை அதிகளவில் பெய்யும்.

அந்த வகையில் சிவகாசி எக்ஸ்னோரா இன்னோவேட்டர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் மியாவாக்கி முறையில் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் பெரியகுளம் தீவு அடர்வனம் என்ற பசுமை தீவை உருவாக்க உள்ளனர்.இதற்காக கண்மாயின் உள்ளே 15 அடி உயரத்தில் செயற்கை தீவு அமைக்கப்பட்டது. முதல் 4 அடி உயரத்திற்கு இயற்கை உரங்கள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். புங்கன், தான்சி, விலாம், ஸ்பெட்ரோலியா, கருங்காளி, நெட்டிலிங்கம், செண்பகம், மகிழம்பூ, இலவம்பஞ்சு, அசோகா, அரசமரம், நாகலிங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் நடப்பட்டது.

இதை மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி சுவாமிநாதன் துவக்கி வைத்தார். சப் கலெக்டர் தினேஷ்குமார், தொழிலதிபர்கள் அபிரூபன், அசோகன், செல்வக்குமார், எக்ஸ்னோரா உறுப்பினர்கள் ரவி, வெங்கடேஷ், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி கலந்து கொண்டனர்.நெருக்கமாக நடப்பட்டுள்ள இம்மரக்கன்றுகளை முதல் 6 மாதங்கள் மட்டும் பராமரித்தால் போதுமானது. இதன் பின் 10 மடங்கு வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும். எந்த மண்ணிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் உறுதியாக பலன் கிடைக்கும். இதன் வளர்ப்பு முறையால் மரங்கள் 30 சதவீதம் கார்பான்டை ஆக்சைடை அதிகமாக கிரகிக்கும்.ஏற்கனவேஇக்கிளப்பினர் பெரியகுளம் கண்மாய் கரையில் மரக் கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். இதுபோல் பல்வேறு கண்மாய், வரத்து கால்வாய்களில் பனை விதைகளை விதைத்துள்ளனர். இது தவிர ரயில்வே ஸ்டேஷன் வளாகம், வெளியே அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு அவைகள் தற்போது பூஞ்சோலையாக காட்சி யளிப்பது குறிப்பிடதக்கது.

Related posts

Leave a Comment