சரி இல்லையே! நகராட்சிகளில் முடங்கி கிடக்கும் திட்டங்கள் …. கிடப்பில் போனது தூய்மை இந்தியா திட்டம்

விருதுநகர் : மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில் மத்தியரசால் கொண்டு வரப்பட்ட துாய்மை இந்தியா திட்டமும் கிடப்பில் போனதால் திறந்தவெளிகழிப்பிடமும் அதிகரிக்க துவங்கி விட்டன.

இங்குள்ள 7 நகராட்சிகளிலும் குப்பையை உரமாக்கும் திட்டம் பெயரளவிலே செயல்படுகிறது. குடிநீர் ஏ.டி.எம்., திட்டம் இன்று வரை எங்கும் செயல்படுத்தவில்லை. பாதாளசாக்கடை திட்டத்தையும் முறைப்படி மக்களிடம் கொண்டு செல்லவில்லை. விருதுநகரில் பல்வேறு முறைகேடுகளால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் விழிபிதுங்கி நிற்கிறது. திட்டம் முடிவுக்கு வரம் முன்பே வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க பாதாளசாக்கடை கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் குல்லுார்சந்தை அணையில் விடப்படுகின்றன. இதனால் நீர்நிலைகளும் பாழாகின்றன.

மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்ட பணிகள் எதுவும் நடப்பதே இல்லை. இதுவே துாய்மை நகரங்களில் நகராட்சிகள் பின்தங்க ஒரு காரணமாகிறது. இன்று வரை திறந்தவெளி கழிப்பிடம், வாறுகாலில் மனிதக்கழிவுகள் விடுவது தொடர்கிறது.இதோடு குடிநீர் பிரச்னைகள் தீராத தலைவலியாக உள்ளது. தரமற்ற கட்டுமான பணிகள், திறக்கப்படாத சுகாதார வளாகங்கள் என அனைத்து திட்டங்களையும் கிடப்பில் போடுவதில் நகராட்சிகள் முதலிடத்தில் உள்ளன. இது போன்ற திட்டங்களை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.எல்லாம் வெறும் பேச்சு தான் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் மியாவாகி காடு வளர்ப்பு முறையில் அடர்வனம் உருவாக்கப்படும் என தெரிவித்தது. பாதாளசாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீரை கொண்டு ஏரி அமைத்து படகு சவாரி நடத்தப்படும் என அறிவித்தது. தற்போது வரை செயல்படுத்தவில்லை. ஏ.டி.எம்.,குடிநீர் திட்டத்திற்கான பிளான்ட்கள் அமைத்தும் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. எல்லாம் வெறும் பேச்சாகதான் உள்ளது. நகராட்சியின் போலி திட்டங்களால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது.பாண்டி, பொறியாளர்,விருதுநகர்.

Related posts

Leave a Comment