இன்று (17.09.2020) வந்துள்ள தமிழ் இந்துவில் என் கட்டுரை தலையங்கம் பக்கத்தில்

இன்று (17.09.2020) வந்துள்ள தமிழ் இந்துவில் என் கட்டுரை தலையங்கம் பக்கத்தில்:கரோனா : அச்சுறுத்தும் மறுதொற்று!டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம். ‘கரோனாவில் ஒருமுறை மீண்டவருக்கு மறுபடியும் தொற்றுகிறதாமே!’ எனும் அச்சம் பொதுவெளியில் பரவலாகக் காணப்படுகிறது. முதன் முதலில், ஆகஸ்ட் மாதம் ஹாங்காங் வந்திருந்த சீன இளைஞர் ஒருவருக்கு இரண்டாம் முறை கரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பித்து, ஜூலையில் பெங்களூருவிலும், இப்போது சென்னையிலும் சிலருக்கு ‘மறுதொற்று’ ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஏப்ரலில் தென்கொரியாவில் கரோனாவிலிருந்து மீண்டவர்கள் 51 பேருக்கு மறுபடியும் அறிகுறிகள் தோன்றின. பரிசோதித்ததில், அவர்களுக்கு ‘மறுதொற்று’ (Reinfection) இல்லை; ‘மறுசீர்கேடு’ (Relapse) என்றார்கள்.இந்த விவகாரம், கரோனா தொற்று ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், மறுபடியும் ஏற்படாது எனும் மக்கள் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் மறுதொற்றாளர்கள் மிகவும் குறைந்த விகிதத்தினரே இருக்கின்றனர் என்பதும், அப்படியே மறுதொற்று ஏற்பட்டாலும் அதன் பாதிப்புகள் தீவிரமாக இருப்பதில்லை என்பதும் ஆறுதல் அளிக்கும் செய்திகள். ஆனாலும், கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மறுபடியும் தொற்று ஏற்படாது என்று உறுதி கூற இயலாது; அவர்களும் மற்றவர்களைப்போல் அனைத்துப் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.ஊரடங்கில் அதிகளவு தளர்வுகள், பொதுப்போக்குவரத்து தொடக்கம், சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்க இருப்பது ஆகிய சூழல்களில் கரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கப் போகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்நிலையில், கரோனா மறுதொற்றும் சேர்ந்துகொண்டால் எப்படி நாம் எதிர்கொள்ளப்போகிறோம்? ‘மறுதொற்று’, ‘மறுசீர்கேடு’ குறித்த புரிதல் இருந்தால் இந்தத் திகைப்பு விலகும்.மறுதொற்றும் மறுசீர்கேடும்!நுண்ணுயிரியால் நோய் ஏற்பட்டு, முழுவதுமாக குணமான பிறகு, மறுபடியும் அதே நுண்ணுயிரித் தொற்றால் புதிதாக நோய் ஏற்படுமானால், அது ‘மறுதொற்று’. அதேவேளையில், ஒரு நுண்ணுயிரியால் நோய் ஏற்பட்டு, அறிகுறிகள் அனைத்தும் மறைந்த பிறகு, சில வாரங்களில் மறுபடியும் அதே அறிகுறிகள் தோன்றுமானால் அது ‘மறுசீர்கேடு’.ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது மறுதொற்றா, மறுசீர்கேடா என்பதைப் புரிந்துகொள்ள, முதல்முறை தொற்றின்போது அவருக்கு இருந்த வைரஸ் மரபணு வரிசை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், இரண்டாம் முறையாக அவருக்குத் தொற்று ஏற்படும்போது உள்ள வைரஸ் மரபணு வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்து அதே வைரஸ்தான் மறுபடியும் தொற்றியுள்ளதா என்று உறுதி செய்யமுடியும். உதாரணமாக, ஹாங்காங் வந்த சீனவாசியிடமிருந்து முதல்முறை எடுக்கப்பட்ட வைரஸ் வரிசையைப் பாதுகாத்து வைத்திருந்தனர். அதனால், அவருக்கு இரண்டாம் முறை தொற்று ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வைரஸ் வரிசையை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அவருக்கு முதல்முறை 19 A கரோனா வைரஸ் துணை இனம் (Strain) பாதித்திருந்தது. இரண்டாம் முறை 20 A துணை இனம் தொற்றியிருந்தது. ஆகவே அவருக்கு “மறுதொற்று” ஏற்பட்டுள்ளது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த வாரம் மும்பையில் மருத்துவப் பணியாளர்கள் 4 பேருக்கு மறுதொற்று ஏற்பட்டுள்ளதை இம்மாதிரியாக மரபணு வழியில் உறுதிசெய்துள்ளனர்.அதேவேளையில், தென்கொரியா நபர்களை ஆய்வு செய்ததில் பழைய வைரஸ்தான் காணப்பட்டது. துணை இனத்திலும் மாற்றமில்லை. இவர்களுக்கு கரோனா வைரஸ் உயிரோடு இருந்திருந்தபோதிலும் சில காரணங்களால் உறக்க நிலையில் செயலில்லாமல் இருந்துள்ளது. அப்போது அறிகுறிகள் மறைந்துள்ளன. அடுத்த சில வாரங்களில் அவர்கள் உடலில் ஏற்பட்ட சில தூண்டுதல்களால் வைரஸ் விழித்தெழுந்து மறுபடியும் செயல்படத் தொடங்கிவிட்டது. அப்போது மீண்டும் அறிகுறிகள் தோன்றிவிட்டன. இந்த ‘மறுசெயல்பாடு’ (Reactivation) காரணமாக அவர்களுக்கு ‘மறுசீர்கேடு’ தொடங்கிவிட்டது. ஆனாலும் மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை.காரணம் என்ன?கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் எதிரணுக்கள் (Antibodies) உற்பத்தியாகிவிடுவதால், மறுதொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்ற கருத்து இருக்கும்போது, கரோனா மறுதொற்று ஏற்படுவதற்கு என்ன காரணம்? பொதுவாக, கரோனா கிருமிகள் உடலுக்குள் நுழைந்து வளரத்தொடங்கியதும், அவற்றை எதிர்த்துப் போராடும்படி நம் தடுப்பாற்றல் மண்டலம் ‘பி’ செல்கள் (B-cells) ‘டி’ செல்கள் (T-cells) எனும் ‘தளபதி’களுக்கு உத்தரவிடுகிறது. ‘பி’ தளபதி IgM, IgG ‘எதிரணுக்கள்’ என்று அறியப்படும் சிப்பாய்களைத் தயார் செய்கிறார். இவர்கள் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவார்கள்; உடல் செல்களுக்குள் கரோனா வைரஸ்கள் நுழைவதைத் தடுப்பார்கள்; அங்கு அவை படியாக்கம் செய்து வளர்வதை நிறுத்துவார்கள்; தொற்றின் வீரியத்தைக் குறைப்பார்கள்.ஆனால், செல்களுக்குள் புகுந்துவிட்ட வைரஸ்களை இந்த எதிரணு சிப்பாய்களால் எட்ட முடியாது. அப்போது ‘டி’ தளபதி உதவிக்கு வருகிறார். ‘கில்லர் செல்கள்’ எனும் ‘சிப்பாய்’களை அனுப்பி கரோனா வைரஸ் புகுந்த செல்களை அழித்துவிடுகிறார். உடலில் முதல் முறையாக கரோனா தொற்று ஏற்படும்போதே இந்த இரண்டு தளபதிகளும் கரோனா வைரஸை இனம் காணும் ஆற்றலைப் பெற்றுவிடுவார்கள். நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். மறுமுறை கரோனா தொற்றும்போது உடனே செயலில் இறங்கி, எதிரணு சிப்பாய்களை அனுப்பி தொற்றைத் தடுத்துவிடுவார்கள்.கரோனா தொற்று ஏற்பட்டவருக்கு இந்தச் செயல்பாட்டில் 3 வாரங்கள் கழித்துத்தான் IgG ‘எதிரணுக்கள்’ உருவாகும். இதுதான் மறுதொற்று ஏற்படாமல் தடுக்கும் எதிரணு. இது அனைவருக்கும் உருவாகும் என்று சொல்லமுடியாது. இதன் எண்ணிக்கை எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று உறுதிகூற முடியாது. காரணம், கரோனா பாதிப்பு பல்வேறு விதமாக இருக்கிறது. இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் தீவிர நிலையிலிருந்து மீண்டவர்களும்தான் எதிரணுக்கள் கணிசமாக உற்பத்தியாகின்றன. அறிகுறிகள் இல்லாத நிலையிலும் மிதமான நிலையிலும் இருப்பவர்கள்தான் மிக அதிகம். இவர்களுக்கு எதிரணுக்கள் அவ்வளவாக உற்பத்தி ஆவதில்லை. ஆகவேதான், இயற்கை வழியில் சமூகத் தடுப்பாற்றல் (Herd immunity) பெறுவது கேள்விக்குறி ஆகிறது. மறுதொற்றையும் தடுக்க முடியவில்லை.கரோனாவைப் பொறுத்தவரை தடுப்பூசிகள் மூலமே முழுமையான சமூகத் தடுப்பாற்றலுக்கு வழி செய்ய முடியும். தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபடியும் போடப்படுவதால் மறுதொற்றுக்கு வழி இல்லாமல் போகும். அதன் பலனாக கரோனா பரவலைத் தடுக்க முடியும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டதால், கரோனாவே ஒழிந்துவிட்டதுபோல் அலட்சியமாக இருக்காமல், அதன் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் விழிப்புணர்வுடன் செயல்பட அரசுத் துறைகள் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.கு. கணேசன், பொதுநல மருத்துவர்,தொடர்புக்கு: gganesan95@gmail.com

Related posts

Leave a Comment