இதை எதிர்பார்க்கவே இல்லையே.. செம ட்விஸ்ட்.. ஸ்டோக்ஸ் செஞ்சுரி.. சாம்சன் சரவெடி.. அதிர்ந்த மும்பை!

இதை எதிர்பார்க்கவே இல்லையே.. செம ட்விஸ்ட்.. ஸ்டோக்ஸ் செஞ்சுரி.. சாம்சன் சரவெடி.. அதிர்ந்த மும்பை!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய ஸ்கோர் எடுத்தும் அந்த அணியால் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து தெறிக்க விட்டார். சஞ்சு சாம்சன் அவருடன் இணைந்து அதிரடி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக பங்கேற்கவில்லை. கீரான் பொல்லார்டு கேப்டனாக தொடர்ந்தார். மும்பை அணி இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் நிலை இருந்தது.

மும்பை அணி முதல் 15 ஓவர்கள் சாதாரண வேகத்தில் ரன் குவித்தது. அதன் பின் தான் வேகம் எடுத்தது. இந்த தொடர் முழுவதும் மும்பை அணி இதே திட்டத்தை தான் செயல்படுத்தி வருகிறது. அதை சரியாக செய்தது அந்த அணி.

ஹர்திக் பாண்டியா அதிரடி இஷான் கிஷன் 37, சூர்யகுமார் 40, சௌரப் திவாரி 34 ரன்கள் எடுத்தனர். கடைசி 4 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடினார். 21 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து மிரள வைத்தார். அவர் மட்டும் 7 சிக்ஸ் அடித்திருந்தார்.

மும்பை ஸ்கோர் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இது அபுதாபியில் நல்ல ஸ்கோர் என கருதப்பட்டது. ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. உத்தப்பா 13, ஸ்மித் 11 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.

கை கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் இந்த தொடர் முழுவதும் சுமாராகவே ஆடி வந்த நிலையில், இந்தப் போட்டியில் அணிக்கு வெற்றி அவசியம் என்ற நிலையில் அதிரடி சதம் அடித்து அணியை கரை சேர்த்தார். 60 பந்துகளில் அவர் 107 ரன்கள் குவித்து இருந்தார்.

சஞ்சு சாம்சன் அரைசதம்

சஞ்சு சாம்சன் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து அதிரடி ஆட்டம் ஆடினார். இந்த ஜோடி 152 ரன்கள் குவித்தது. சாம்சன் 31 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தும் இவர்களை கடைசி வரை பிரிக்க முடியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த சீசனில் முதல் அணியாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் செல்ல இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று, நெட் ரன் ரேட்டையும் அதிகரிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment