200 தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க., திட்டம்

தமிழகத்தில், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காத வகையில், 200 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஆட்சியில் பங்கு கேட்கும், பா.ஜ., – பா.ம.க.,வை கழற்றி விடவும் ஆலோசித்து வருகிறது.

மீதியுள்ள இடங்களை, தே.மு.தி.க., – த.மா.கா., மற்றும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கவும், வீழ்ந்த ஓட்டு சதவீதத்தை உயர்த்தவும், அதிரடி ஆட்டம் ஆட, அ.தி.மு.க., ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 44 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது; 37 தொகுதிகளை கைப்பற்றியது. 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், 41 சதவீதம் ஓட்டுக்களை, அ.தி.மு.க., பெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தேனி தொகுதியில் மட்டுமே, அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

தனிக்கட்சி ஆட்சிஅந்த தேர்தலில்,அ.தி.மு.க.,வுக்கு, 18.5 சதவீத ஓட்டுக்கள் தான் கிடைத்தன. ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., 80 சதவீதம் இடங்களில் போட்டியிட்டு, 33 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதாவது, தி.மு.க.,வுக்கு இணையாக, அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 85 சதவீதம், அதாவது, 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான சாதக, பாதக விபரங்களை, ஆளுங்கட்சி மேலிடத்திற்கு, உளவுத்துறை திரட்டி தந்துள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், 60 தொகுதிகள்; ஆட்சியில் பங்கு; துணை முதல்வர் பதவி என, பா.ஜ., தரப்பில் பெரிய பட்டியல் வைக்கப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்றில், ‘வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும். அடுத்து அமையும் ஆட்சியில், பா.ஜ., கட்டாயம் பங்கு பெறும். கூட்டணி ஆட்சிக்கான காலம் கனிந்து வருகிறது’ என்றார்.

அவரது கருத்து, அ.தி.மு.க.,வில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.,வுக்கு பதிலடி தரும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், ‘தமிழகத்தில், நேற்றும் கூட்டணி ஆட்சி நடைபெற்றதில்லை.இன்றும், கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. எதிர்காலத்திலும் நடைபெற வாய்ப்பில்லை. தனிக்கட்சி ஆட்சி தான் தொடர்கிறது’ என்றார்.
அதேபோல, பா.ம.க., அரசியல் ஆலோசனை குழு தலைவர் தீரனும், ‘ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்’ என, ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.

அ.தி.மு.க. கணக்குஎனவே, கூட்டணி ஆட்சி ஆசையில் உள்ள, பா.ஜ., – பா.ம.க., கட்சிகளை கழற்றி விடலாம் என்ற, முடிவுக்கு, அ.தி.மு.க., வந்துள்ளதாக தெரிகிறது. த.மா.கா.,வுக்கு, 10 தொகுதிகள்; தே.மு.தி.க.,வுக்கு, 15 தொகுதிகள் போக, மீதமுள்ள தொகுதிகளை, சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என, ஆளும் தலைமை கருதுகிறது. சிறிய கட்சிகளை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்றும், திட்டமிடுகிறது. அதனால், 85 சதவீதம் அடிப்படையில், 200 தொகுதிகளில் போட்டியிடவும், தற்போது உள்ள, 18.5 சதவீதம் ஓட்டு வங்கியை, 40 சதவீதத்திற்கு மேல் உயர்த்தி, மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், அ.தி.மு.க., கணக்கு போடுகிறது.
இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க., 5 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. இரட்டை இலை சின்னம் இல்லாத இடங்களில் தான், அ.ம.மு.க.,வால், 5 சதவீத ஒட்டுக்களை பெற முடிந்தது. வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிட்டால், அ.ம.மு.க., ஓட்டுக்கள், இரட்டை இலைக்கு தான் கிடைக்கும்.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காமல் இருந்தால், சிறுபான்மையினர் சமுதாய ஓட்டுக்களும், தி.மு.க.,வுக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்காமல் தடுக்க முடியும். அ.தி.மு.க.,வுக் கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


கணிசமான தொகுதிகள்அதேபோல, பா.ம.க.,வை கழற்றி விடுவதால், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில், இரட்டை இலை ஆதரவு தலித் சமுதாய ஓட்டுக்களால், கணிசமான தொகுதிகளை கைப்பற்ற முடியும். மேலும், வட மாவட்டங்களில், வன்னியர் சமுதாயத்தினர் அல்லாத மற்ற சமுதாயத்தினர் ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.இதனால், கொங்கு மண்டல்தில், 45 தொகுதிகள், தென் மண்டலத்தில், 30 தொகுதிகள், வட மாவட்டங்களில், 30 தொகுதிகள், டெல்டா மாவட்டங்களில், 10 தொகுதிகள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 15 தொகுதிகள் என, 130க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி, அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடியும் என, தேர்தல் கணக்கு போடப்படுகிறது. இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. – நமது நிருபர் –

Related posts

Leave a Comment