தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம்: கமல் பேட்டி

சென்னை:”சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம்,” என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்தார்.

சென்னையில் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது தெம்பாக இருந்தது. அரசியல் குறித்து ரஜினியும் நானும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அரசியலைவிட அவரது உடல் நலனே முக்கியம். அரசியல் நிலைபாடு பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம். யாருடன் கூட்டணி என்பது பற்றி பேச வேண்டிய நேரம் இதுவல்ல.3வது அணி அமைந்துவிட்டது என சொல்கிறேன். நல்லவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். நல்லவர்கள் மற்ற கட்சிகளிலும் உள்ளனர். அவர்களை அழைக்கிறேன். நல்லவர்கள் சேரும்போது 3வது அணியாக இருக்காது, முதல் அணியாக இருக்கும். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மையத்தின் அரசியல் வியூகம்.

நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல; வழிகாட்டும் அரசியலாக இருக்கும்.கடந்த சில மாதங்களில் ஒரு லட்சம் பேர் எங்கள் கட்சியில் புதிதாக சேர்ந்துள்ளனர். மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது.

சட்டசபையில் எங்கள் கட்சியின் குரல் நிச்சயம் ஒலிக்கும். நான் எந்த தொகுதியில் போட்டி இடுவேன் என்பது வேட்புமனுவில் கையெழுத்திடும்போது தெரியும். பாஜ.,வின் வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது நல்லதே. தமிழகத்திற்கு வேல் யாத்திரை வேண்டாம், வேலை தான் வேண்டும். நான் எப்போதும் ‘பி’ டீமாக இருந்தது இல்லை, ‘ஏ’ டீமாக தான் இருந்துள்ளேன்.புழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகத்தை பற்றி பேச தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

சுற்றுப்பயணம்சட்டசபை தேர்தலுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கமல் அறிவித்துள்ளார். அதன்படி நவ.,26 திருச்சி, 27 மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டிச.,12ல் கோவை, 13 சேலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

Related posts

Leave a Comment