பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம்… விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது அரசு -துரைமுருகன்

சென்னை: விவசாய பெருங்குடி மக்களுக்கு பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் என்ற அறிவிப்புக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 20 மணி நேரமாவது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகலில் 6 மணி நேரம்

பகலில் 6 மணி நேரம் இலவச மின்சாரம் பகலில் 6 மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு அடுத்த கட்ட துரோகத்தைச் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த அறிவிப்புக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு முன் நடத்தப்படும் பரிசோதனை ஓட்டமா? அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்குச் செய்துள்ள அடுத்தகட்டத் துரோகம் இது. 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும் – அது இயலவில்லை என்றால் குறைந்தபட்சம் 20 மணி நேரமாவது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகித்திட வேண்டும்.

சட்டமன்றத்தில் ஒரு வாக்குறுதியும் – வெளியில் வேறு விதமாகவும் செயல்படும் அ.தி.மு.க. அரசு- விவசாயிகள் விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவதும்- விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் கொடுக்க மறுப்பதும் மிகுந்த வேதனையாக இருக்கிறது. தயவு செய்து விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள். வியர்வை சிந்தும் விவசாயிகள் மனதில் வேலைப் பாய்ச்சாதீர்கள்.

Related posts

Leave a Comment