விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள துார்ந்த கிணறுகளை மாவட்ட நிர்வாகம் புனரமைக்காததால் நீர் மேலாண்மை கேள்விக்குறியாகி வருகிறது.
கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் காமராஜர் சிலைக்கு பின்புறம், பொதுப்பணித் துறையின் விருந்தினர் மாளிகை பின்புறம், கருவூல அலுவலகம் பின்புறம், எஸ்.பி., அலுவலகம் பின்புறம் என ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் கிணறுகள் உள்ளன. கலெக்டர் அலுவலகம் நுழைவு பகுதியில் உள்ள கிணறு மட்டுமே பாதுகாக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது. மற்ற கிணறுகள் துார்ந்து போயும், குப்பைகள் தேங்கியும், புதர்மண்டியும் காணப்படுகிறது.
தேவையான மழை பெய்தும் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. கலெக்டர் அலுவலகம் கூரைக்கூண்டு ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. எனினும் குடிநீர், பிற தேவைகளை நகராட்சி நிர்வாகம் உதவி வருகிறது. அலுவலர்கள், ஊழியர்கள் குடிப்பதற்கு மினரல் குடிநீர் கேன்களும் அதிகளவில் வாங்குவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.கலெக்டர் அலுவலக வளாகம் மருத்துவ கல்லுாரி கட்டுமான பகுதியில் ஏற்கனவே துார்ந்து போன கிணறு இருந்தது. இதை சீரமைத்து தற்போது குடிநீர் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதை போல் துார்ந்த கிணறுகளை துார்வாரி சீரமைத்தாலே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற முடியும். மழைநீரை சேமிக்க மழைநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் மழை நீர் வீணாகாமல் குடிநீராக பயன்படுத்த இயலும்.