ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஊரகவளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ஓய்வு ஊழியர் மற்றும் கான்ட்ராக்டரிடமிருந்த ரூ.39 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் சிவகாமி, உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி மற்றும் 2 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு ஒன்றியங்களில் நடக்கும் பணிகளுக்கு கான்ட்ராக்டர்களுக்கு வழங்கும் பில்தொகைக்கு லஞ்சம் பெறப்படுவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு தகவல் கிடைத்தது.
கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் 2:00 மணிக்கு டி.எஸ்.பி.,கருப்பையா, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார், அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார், ஜீப், டூவீலர்கள் , அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர்.
ஓய்வு பெற்ற, அலுவலக உதவியாளர் அழகுமுத்து டூவீலரில் ரூ.27 ஆயிரம், ராஜபாளையம் கான்ட்ராக்டர் விக்னேஷ்ரமணாவிடம் ரூ.12 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். உதவி இயக்குனர் சிவகாமி, உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரிடம் பணம் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் இருவரிடமும் இரவு 7:00 மணிவரை விசாரணை நடத்தினர்.