அதிகாரிகளை கண்டித்து மறியல்; போலீசார் தடியடி

நரிக்குடி:உபரி நீரை திறந்து விடுவதாக கூறி சென்று காலதாமதப்படுத்தும் கலெக்டர், தாசில்தாரை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

நரிக்குடி கீழ் இடையன்குளம் கண்மாயில் இருந்து வெளியேறும் உபரிநீர் நீண்டகாலமாக மைலி கண்மாய்க்கு சென்றது. இதை சில ஆண்டுகளாக கீழ் இடையான்குளம் கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர். மைலி கண்மாய் நிரம்பாமல் விவசாயம் பாதிக்கப்பட்டதையடுத்து உபரி நீரை திறந்து விட அதிகாரிகளிடம் கோரினர்.

பல்வேறு போராட்டங்களை நடத்திய மைலி கிராமத்தினர் ஆத்திரமடைந்து சில மாதங்களுக்கு முன் தாசில்தாரிடம் ரேஷன் கார்டை ஒப்படைத்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சில தினங்களில் உபரி நீரை திறந்து விடுவதாக கூறினர். இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இந்நிலையில் கால தாமதப்படுத்தி வரும் கலெக்டர், தாசில்தாரை கண்டித்து திருச்சுழி–ராமேஸ்வரம் சாலையில் 4 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் தன்ராஜ், டி.எஸ்.பி.,கள் ஜெயக்குமார், சகாய ஜோஸ் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்து மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதோடு அரசை புறக்கணிப்ப தாக கூறி வாக்காளர் அடையாள அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.இதை தொடர்ந்து மைலியிலிருந்து கீழ் இடையன்குளம் செல்லும் ரோட்டை மறித்து மண்மேடு ஏற்படுத்தினர். அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment