கன மழையால் சூழந்த காட்டாற்று வெள்ளம்; கண்மாய்களில் உடைப்பால் தீவாக மாறிய குக்கிராமங்கள்

நரிக்குடி : மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளத்தால் நரிக்குடியில் பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு குக்கிராமங்கள் தீவாக மாறியது .

மாவட்டத்தில் துவக்கத்தில் இருந்தே வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டிய நிலையில், அடுத்தடுத்து நிவர், புரெவி புயல்கள் தாக்கத்தில் மழை வெளுத்து கட்டியது. வடக்கு திசையில் இருந்து வேகமாக வீசும் காற்றால் வடகிழக்கு பருவமழை மேலும் பத்து நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டியது.

இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நரிக்குடியை சுற்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் நான்கு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் உருவான காட்டாற்று வெள்ளம் கிராமங்களை சூழ்ந்து தீவுக்காடாக்கியது. நீர் வரத்து அதிகரித்ததால் எழுவணி ஊராட்சி உட்பட் ஆயக்குளம், வந்தவாசி, காளஸ்தியேந்தல், புதுக்குளம் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது.

இதன் காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல், உளுந்து, பருத்தி பயிர்கள் வயலில் சாய்ந்தன. கண்மாய்களை துார் வாரி பராமரிக்க நரிக்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தவறியதால் கண்மாய்களை மழை நீர் நிரப்பினாலும் உடைப்பு ஏற்பட்டு வீணாகி வருகிறது.

Related posts

Leave a Comment