மதுரை மாவட்டத்தில் 215 அரசு உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய தலா ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.மத்திய அரசின் சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான உபகரணங்கள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் தலைமையாசிரியர்கள் உறுதி செய்து பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு (எஸ்.எம்.டி.சி.,) சார்பில் தீர்மானம் நிறைவேற்றி கொள்முதல் செய்ய வேண்டும். இந்நிதியை பள்ளிகளுக்கு விடுவிக்காமல் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் ‘லிஸ்ட்’டை மட்டும் உயர் அதிகாரிகள் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி மானிய தொகையில் ‘கோவிட் 19’ பொருட்களை சேலம் தனியார் கம்பெனியில் மட்டும் கொள்முதல் செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டது. தற்போது விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இதற்கு தான் உபகரணங்கள் ‘லிஸ்ட்’ கேட்டுள்ளனர். இச்சர்ச்சையை தவிர்க்க ஒதுக்கப்பட்ட நிதியை பள்ளிகளுக்கு விடுவித்து எஸ்.எம்.டி.சி., தீர்மானத்துடன் சுதந்திரமாக கொள்முதல் செய்ய சி.இ.ஓ., சுவாமிநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு எப்போது?
