மாண்பை பறைசாற்றும் பொங்கல்; பெருமிதம் கொள்ளும் பெண்கள்

தமிழர்கள் பல விழாக்களை கொண்டாடினாலும் தை முதல் நாளன்று கொண்டாடப்படும் பொங்கல் தான் பாரம்பரியம் மிக்கது. இது மாண்பை பறைசாற்றும் பண்பாட்டு விழாவாகும். நன்றி செலுத்துவது, உழைப்பை அங்கீகரிப்பது போன்ற பல உயரிய நோக்கங்களை கொண்டா விழா தான் பொங்கல் திருநாள்.

மார்கழி கடைசி நாளில் போகி கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து வீட்டை புது பொலிவோடு மாற்றுவர். பிற்காலத்தில் இந்த விஷயம் மருவி பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதும் சேர்ந்து விட்டது. தை முதல் நாளில் அதிகாலையில் குளித்து சூரிய பகவானை வணங்கி வாசலில் கோலமிட்டு புதுப்பானை வைத்து புது அரிசியிட்டு பொங்க வைப்பர். தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு.

கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் கூடி நின்று பொங்கலோ பொங்கல் என முழக்கம் இடுவர். பின்னர் பொங்கலை எடுத்து கடவுளுக்கு படைத்து குடும்பத்தார் உண்பர். அடுத்த நாளான மாட்டு பொங்கலில் உழவுக்கும், தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் ஜல்லி கட்டு போன்ற வீர விளையாட்டுகளும் நடக்கும். மூன்றாவது நாள் காணும் பொங்கலை வெளியே சென்று ‘பால் பொங்கவிட்டதா’ என ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து அன்பை பரிமாறி கொள்வர். வீட்டை விட்டு வெளியே செல்லாதவர்கள் கூட காணும் பொங்கல் அன்று வெளியே வந்து வெளியுலக மகிழ்ச்சியை அனுபவிப்பர். உழைப்பின் மகிமையை உலகுக்கு சொல்லும் விழா பொங்கல்.

Related posts

Leave a Comment