சிவகாசியில் துவங்கியது மாநில தடகள போட்டி

சிவகாசி : விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான ‘அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 ‘போட்டிகள் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரியில் துவங்கியது.

இதை கலெக்டர் கண்ணன், எஸ்.பி., பெருமாள், காளீஸ்வரி குழும தலைவர் செல்வராசன், மெப்கோ கல்லுாரி முதல்வர் அறிவழகன், தமிழ்நாடு அத்லெட்டிக் சங்கம் இணை செயலாளர் லதா, பொருளாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தனர். கலெக்டர் பேசியதாவது: கொரோனா காலம் 10 மாதங்கள் முடிந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை மைதானத்தில் பார்க்கும் போது மனதிற்கு எழுச்சி, உற்சாகம் கிடைக்கிறது. சிறந்த வீரன் உருவாவதற்கு உடற்கட்டு, பயிற்சி போதாது. போதுமான மன உறுதியும் இருந்தால் மட்டுமே எந்த போட்டியானாலும் எளிதாக வெற்றி பெற முடியும்.

போட்டியில் வெற்றி பெறுவதை விட பங்கேற்பது மிக முக்கியமானது,என்றார். தேசிய கொடி, மாநில அத்லெட்டிக் கொடி, மாவட்ட அத்லெட்டிக் கொடி ஏற்றப்பட்டது. சாதனை வீரர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் சமாதான புறாக்களை பறக்க விட்டனர். 3000 க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாளான நேற்று ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக வயது பிரிவு வாரியாக ஓட்டம், ஷாட்புட், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

Related posts

Leave a Comment