மதுரை விவசாயிகள் தாராளம்: ஆவியூர் விவசாயிகள் நெகிழ்ச்சி

காரியாபட்டி : பூச்செடிகள் அழிந்தாலும் பரவாயில்லை தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என கூறிய மதுரை விவசாயிகளை கண்டு ஆவியூர் கிராமத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

காரியாபட்டி பகுதியில் கனமழை, புரவி புயலுக்கு நிரம்பாத பெரிய கண்மாய்களில் ஆவியர் கண்மாயும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் வரத்துக்கால்வாய் இல்லாதது தான். கண்மாய் வறண்ட நிலையில் காணப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் நிலையூர் கால்வாயில் வைகை ஆற்றிலிருந்து வந்த தண்ணீரை பகிர்ந்தளிக்க ஆவியூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அக்கால்வாய் பாசனத்தில் பயன்பெறும் மதுரை மாவட்ட கிராமத்தினர் மறுத்தனர். ஆவியூர் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி ரவி மதுரை மாவட்ட கிராம உள்ள விவசாயிகளிடம் உருக்கமாக பேசியதை யடுத்து தண்ணீர் திறந்துவிட சம்மதித்தனர்.இரவும் பகலும் பாராமல் வரத்துக்கால்வாய் ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு வந்ததையடுத்து கண்மாய்க்கு ஓரளவிற்கு தண்ணீர் வந்தது. வரத்துக் கால்வாயில் சில இடங்களில் மேட்டுப்பகுதியாக இருந்ததால் ஆங்காங்கே கால்வாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

இதை தடுக்க கடுமையாக போராடியும் உடைப்பை தடுக்க முடியவில்லை. இதை அறிந்த பாரப்பத்தி கிராம விவசாயிகள் பூச்செடிகளை அழித்து வரத்துக்கால்வாய் ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு செல்ல தாங்களாக முன்வந்து உதவினர். இதனால் நெகிழ்ச்சியடைந்த ஆவியூர் கிராமத்தினர் வரத்து கால்வாய் தோண்டும் பணியை தீவிரப்படுத்தினர். பிரதிபலன் எதிர்பார்க்காமல் விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என கூறிய விவசாயிகளின் மனிதாபிமானம் பாராட்டுதற்குரியதே.

Related posts

Leave a Comment