அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ரோட்டோரம் பாதசாரிகள் நடக்க முடியாமலும், வாகனங்கள் ஒதுங்க முடியாமலும் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாக நான்கு வழிச்சாலை, ராஜாபாளையம் – கொல்லம், ராஜபாளையம் – தென்காசி இடையே தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தவிர மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டுப்பட்ட ரோடுகள் பல உள்ளன. இவற்றில் ரோடு விரிவாக்கம் பணிக்காக அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.
பராமரிப்பில்லாததால் ரோட்டோரங்களில் காடு போல் முட் செடிகள் வளர்ந்துள்ளன. பாதசாரிகள் ரோட்டோரம் நடந்து செல்லவும், டூவீலர்கள், வாகனங்கள் ஒதுங்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. சாலை பணியாளர்கள் ரோடுகளை பராமரித்து வந்தனர். தற்போது ரோடு பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி அவசியம்
ரோடுகள் முறையான பராமரிப்பு இன்றி முட் செடிகள் காடு போல் வளர்ந்து இடையூறாக உள்ளது. ஓரத்தில் ஒதுங்கும் போது முட்செடிகள் காரின் பெயின்ட்டுகளை உரித்து விடுகின்றன. ரோடுகளை அகலப்படுத்துவதற்காக கழிவுகளை ரோட்டோரம் கொட்டி இடையூறு ஏற்படுத்துகின்றனர். பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.கனகராஜ், சமூக ஆர்வலர், அருப்புக்கோட்டை.