நெசவாளர்கள் முற்றுகை போராட்டம்; இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் பணி ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி நெசவாளர்கள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதோடு இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையத்தில் சிவகாமிபுரம், தெற்கு வைத்தியநாதபுரம் துரைச்சாமிபுரம் பகுதிகளில் 3 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இதை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனர் பதவிக்கு அரசு ஊதியம் அளித்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி கைத்தறி மற்றும் துணி நுால் துறையின் நிர்வாத்தில் இருந்து ராஜபாளையத்தில் செயல்படும் 3 கூட்டுறவு சங்கங்களுக்கு கோபால் என்ற மேலாண்மை இயக்குனரை நியமனம் செய்துள்ளது.

இந்த இயக்குனரின் ஊதியம் ரூ. 80 ஆயிரத்தை 3 சங்கங்களும் இணைந்து வழங்குமாறு ஆணை வெளியிட்டுள்ளது. மேலாண்மை இயக்குனர் பணி ஆணையை ரத்து செய்து, அதிகாரியை திரும்ப பெற வலியுறுத்தி அப் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நஷ்டத்தில் இருந்த கூட்டுறவு சங்கங்கள் தற்போது லாபம் ஈட்ட தொடங்கி உள்ள நிலையில் மீண்டும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசும், கைத்தறி துறையும் செயல்படுவதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டினர்.இதோடு இன்று முதல் 500க்கு மேற்பட்ட தறிகளை நிறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment